Wednesday, 29 July 2009

பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்

ஜூலை.29: சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் இன்று அதிகாலை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 58.

ராஜன் தேவ் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அங்காமலையில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.


ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் பிறந்த தேவ், 1980ல் சிறுசிறு வேடங்களுடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவந்த தேவ், இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.

Tuesday, 28 July 2009

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராஜிநாமா

ஜூலை 28: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.
சோபியான் படுகொலைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று பெரும் அமளி நிலவியது.
இன்று வேறொரு விவகாரத்தால் அவை கொந்தளித்தது. இளம் பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சரணைடந்த பயங்கரவாதிகளிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இன்று அவை தொடங்கியதும் இந்தப் பாலியல் மோசடி விவகாரத்தில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் துணை முதல்வரும் பிடிபி மூத்த தலைவருமான முஸாபர் பெய்க் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, கடும் உணர்ச்சிவசப்பட்டவரான உமர், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தம்மால் சகித்துக் கொள்ள முடியாது எனவும் தம்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்வரை தம்மைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.இதை ஏற்காத எதிர்கட்சியினர், இந்த வழக்கில் 102-வது குற்றவாளியாக உமர் பெயர் இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, ராஜிநாமா செய்யப் போவதாக உமர் தெரிவித்தார்.
தம்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது எனக்குத் தெரியும். எனினும், தாம் நிரபராதி என நிரூபிக்கும்வரை தாம் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றார் அவர்.இவ்வாறு உமர் பேசியதும், அவை கொந்தளித்தது. கடும் அமளி ஏற்பட்டது. எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் உமரை சமாதானம் செய்ய முயன்றனர். அவரது ராஜிநாமாவை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறினர். இதை ஏற்காத உமர் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

Monday, 27 July 2009

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

ஜூலை 27- ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்பட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் தான் பணியாற்றும் ""ஏபிசி டி.வி."" என்னும் தொலைக்காட்சிக்கு செய்தி அளித்திருந்தார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் 2 ஏஜென்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை அணுகினார். இதில், 3000 அமெரிக்க டாலர்கள் முதல் 5000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினால் அத்தகைய சான்றிதழ்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புலனாய்வுச் செய்தி ஏபிசி டி.வி.,யில் அண்மையில் வெளியானது.
இதையடுத்து அந்த பெண் செய்தியாளரை சிலர் மிரட்டியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஜூலை 26: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். "ஐஎன்எஸ் அரிஹந்த்' என்ற இக்கப்பல், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது. கார்கில் வெற்றியின் 10-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், தனது மனைவியுடன் தனி ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் வந்தார். பிரதமரின் மனைவி குர்ஷரண் கெüர், தேங்காய் உடைத்து கப்பலை முறைப்படி தொடக்கிவைத்தார்.
6 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 110 மீட்டர், அகலம் 11 மீட்டர். இதற்கான செலவு ரூ.30 ஆயிரம் கோடி. இக்கப்பலை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆனது. ரஷியாவின் சார்லி அணுசக்தி கப்பலைப் போன்று தோற்றமுடைய ஐஎன்எஸ் அரிஹந்த், முதல் இரண்டு ஆண்டுகள் கடலில் முன்னோட்டம் பார்க்கப்படும். பின்னர் முழுவதுமாக பணியில் ஈடுபடுத்தப்படும்.
இக்கப்பலில் 12 கே-15 வகை ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடைகொண்டது. சுமார் 750 கி.மீ. தூரம் இலக்கை தாக்கவல்லது. இக்கப்பலில் கடற்படை வீரர்கள் 95 பேர் உள்ளனர்.
விழாவில் பங்கேற்று பிரதமர் பேசியதாவது: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சாதனையாகும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்கும் உலக நாடுகளுடன் (அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா) நாமும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெருமையளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday, 23 July 2009

விடுதலைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியமனம்

ஜூலை 21: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக செல்வராஜா பத்மநாதன் என்ற குமாரன் பத்மநாதன், செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
"கே.பி.' என்று அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவது மற்றும் ஆயுங்களை கொள்முதல் செய்து தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இவர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை.