Thursday, 18 March 2010

குத்துச்சண்டை: இந்தியா சாம்பியன்

மார்ச்.18 (டிஎன்எஸ்) காமன்வெல்த் குத்துச்சண்டை தொடரில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐந்தாவது காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், தில்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த "மிடில் வெயிட்' 75 கி.கி., பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் இந்தியாவின் விஜேந்தர், இங்கிலாந்தின் பிராங்க் பக்லியானியை சந்தித்தார்.
போட்டி துவங்கிய சில வினாடியில் இங்கிலாந்து வீரர் விட்ட குத்தில், விஜேந்தருக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் மனஉறுதியுடன் விளையாடிய இவர், முதல் சுற்றில் 3-1 என முன்னிலை பெற்றார். அடுத்த சுற்றிலும் அசத்திய விஜேந்தர் 7-2 என, புள்ளிகள் பெற்றார்.
தொடர்ந்து மூன்றாவது சுற்றில் விஜேந்தர், பிராங்கின் மீது சரமாரியாக, தாக்குதல் தொடுத்தார். இறுதியில் 13-3 என்ற புள்ளிக்கணக்கில், விஜேந்தர் அசத்தல் வெற்றி பெற்று, சர்வதேச போட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியா சார்பில் 10 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 பேர் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர். மீதமிருந்த 6 வீரர்களும் வீரர்களும், தங்கம் வென்று சாதிக்க, இந்தியா (36 புள்ளி) ஒட்டுமொத்த அணிக்கான, சாம்பியன்ஷிப் கோப்பையை இங்கிலாந்திடம் (23 புள்ளி) இருந்து, தட்டிப் பறித்தது.
இதற்கு முன் கிளாஸ்கோவில் நடந்த (2005), காமன்வெல்த் தொடரில் இந்தியா சாம்பியன்ஷிப் கோப்பை வென்று இருந்தது. தவிர, இத் தொடரின் சிறந்த வீரராக விஜேந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் பிராங்க், வெள்ளியும், டான்சானியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றனர். (டிஎன்எஸ்)

Wednesday, 24 February 2010

ஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி

டோயோட்டா, ஹோண்டா வரிசையில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல் காரில் கோளாறு ஏற்பட்டுள்ள காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்த அவற்றை திரும்பப்பெற்று உதிரிபாகங்களை மாற்றித் தர முடிவு செய்துள்ளது.
'எரிசக்தி பம்ப்' குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது ஏ-ஸ்டார் மாடல் கார்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளது.
'கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏ-ஸ்டார் மாடல் கார்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில புகார் கள் வந்தன. எரிபொருள் டாங்க் தொடர்பாக ஒரே மாதிரியான புகார்கள் வந்தன.
இதையடுத்து மற்ற வாடிக்கையாளர்களையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ஆகஸ்ட் 22ம் ஆண்டுக்குள் விற்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களில் மட்டும் இந்த குறைபாடு இருந்தது தெரியவந்தது.
டாங்க்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் நிரப்பப்படும் சமயத்தில், கசிவு ஏற்படக்கூடிய அளவுக்கு குறைபாடுகள் காணப்பட்டன.
இதனால் பெரிய பிரச்னை இல்லை என வாடிக்கையாளர்கள் கருதினாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த காலகட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் கார்களில் எரிசக்தி பம்ப் கேஸ்கெட் மற்றும் ரிங் ஆகியவற்றை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை இன்று (24-02-2010) தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
 * மேலும் 10 துரந்தோ ரயில்கள் அறிமுகம்
* பெண் பயணிகள் பாதுகாப்பு அதிகரிப்படும்.
* 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
* 21 ரயில் மார்க்கங்களின் தூரம் நீட்டிக்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
* 2011 நிதி ஆண்டில் புதிதாக 54 ரயில்கள் இயக்கப்படும்.
* வரும் நிதி ஆண்டிற்குள் மேலும் 117 ரயில்கள் இயக்கப்படும்.
* ஒரே ஆண்டில் 1000 கி.மீ., இரயில் பாதைகள் அமைக்கப்படும்.
* 16 வழித்தடங்களில் புதிதாக 16 சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும்.
* மும்பைக்கு புதிதாக 101 புறநகர் ரயில் நிலையங்கள் இயக்கப்படும்.
* காமன்வெல்த் 2010 போட்டிகளுக்காக சிறப்பு ரயில்கள் இ‌யக்கப்படும்.
* மேலும் பல மேம்படுத்தப்‌பட்ட சரக்கு காப்பகங்கள் உருவாக்கப்படும்.
* ஏ.சி., வகுப்பு சேவை கட்டணம் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைப்பு.
* ஐ.ஐ.டி., காரக்பூரில் ரயில்வே துறை குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
 * சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும்.
* பயணிகள் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த 1300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் ரயில் டிக்கட் கவுன்டர் அமைக்கப்படும்.
* செகந்தரபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு அகடமிகள் தொடங்கப்படுகின்றன.
* ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பரிசோதனை நிலையம் பெங்களூருவில் அமைக்கப்படும்.
* உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களுக்கு சரக்கு கட்டணம் குறைப்பு.
* ரயில்வே பெண் ஊழியர்கள் வசதிக்காக அவர்கள் குழந்தைகளுக்கென பாதுகாப்புமையங்கள் அமைக்கப்படும்.
* ரயில்வே துறைக்காக குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்கப்படும்.
* ரவீந்தரநாத் ‌தாகூரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பாரத் தீர்தா என்ற பெயரில் நாட்டின் அனைதது முக்கிய யாத்திரை இடங்களுக்கும் ரயில் விடப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துடன் இணைந்து வீடு கட்டித்தரப்படும்.
* மொபைல், இ. டிக்கெட் சேவையை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் பெற ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இன்று குவாலியரில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் பெட்ச்மன் ஒருவர் அடிக்கும் முதல் இரட்டை சதமாகும். சச்சின் அடித்த 200 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோராகும்.
இதற்க்கு முன் பாகிஸ்தானின் சயீத் அன்வர் மற்றும் ஜிம்ப்பாவேயின் கோவன்ட்ரி ஆகியோர் அடித்த 194 ரன்களே ஒரு நாள் போட்டிகளில் அதிக பட்ச ஸ்கோராக இருந்து வந்தது. இன்று சிறப்பாக அடித்து விளையாடிய சச்சின் தன்னுடைய அதிக பட்ச ஸ்கோரான 186 ரன்களை கடந்தும், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

Thursday, 18 February 2010

மாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்

சிறிய ரக கார் களுக்கு பிரசித்தி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய மாடலான 'மாருதி சுசுகி கிஸாஷி'யை இந்தியாவில் இந்தாண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டில் ஃபிராங்க்பர்ட்டில் நடந்த மோட்டார் ஷோவில் இந்த மாடலுக்கான 'கான்செப்ட்' காரை மாருதி சுசுகி காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் இந்த மாடல் காணப்பட்டது.

இந்தாண்டு இந்தியாவில் இம்மாடலின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் துவக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரவுன் இதுபற்றி கூறுகையில்,
'கிஸாஷி இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையை துவக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்று குறிப்பிட்டார்.
21 இன்ச் வீல்களைக் கொண்ட இந்த கிஸாஷி, ஸ்டைலான வடிவமைப்புடன் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் விலை சுமாராக ரூ.10 லட்சம் இருக்கும். இந்திய சந்தையில் ஆடி ஏ 4, டொயோட்டா கரோல்லா, அக்யூரா டிஎஸ்எக்ஸ், ஹோண்டா சிவிக், ஃபோர்ட் ஃபோகஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக கிஸாஷி அமையும்.
லிட்டருக்கு 10 முதல் 11 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது.