மார்ச்.18 (டிஎன்எஸ்) காமன்வெல்த் குத்துச்சண்டை தொடரில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐந்தாவது காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், தில்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த "மிடில் வெயிட்' 75 கி.கி., பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் இந்தியாவின் விஜேந்தர், இங்கிலாந்தின் பிராங்க் பக்லியானியை சந்தித்தார்.போட்டி துவங்கிய சில வினாடியில் இங்கிலாந்து வீரர் விட்ட குத்தில், விஜேந்தருக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் மனஉறுதியுடன் விளையாடிய இவர், முதல் சுற்றில் 3-1 என முன்னிலை பெற்றார். அடுத்த சுற்றிலும் அசத்திய விஜேந்தர் 7-2 என, புள்ளிகள் பெற்றார்.
தொடர்ந்து மூன்றாவது சுற்றில் விஜேந்தர், பிராங்கின் மீது சரமாரியாக, தாக்குதல் தொடுத்தார். இறுதியில் 13-3 என்ற புள்ளிக்கணக்கில், விஜேந்தர் அசத்தல் வெற்றி பெற்று, சர்வதேச போட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியா சார்பில் 10 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 பேர் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர். மீதமிருந்த 6 வீரர்களும் வீரர்களும், தங்கம் வென்று சாதிக்க, இந்தியா (36 புள்ளி) ஒட்டுமொத்த அணிக்கான, சாம்பியன்ஷிப் கோப்பையை இங்கிலாந்திடம் (23 புள்ளி) இருந்து, தட்டிப் பறித்தது.
இதற்கு முன் கிளாஸ்கோவில் நடந்த (2005), காமன்வெல்த் தொடரில் இந்தியா சாம்பியன்ஷிப் கோப்பை வென்று இருந்தது. தவிர, இத் தொடரின் சிறந்த வீரராக விஜேந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் பிராங்க், வெள்ளியும், டான்சானியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றனர். (டிஎன்எஸ்)