Friday 18 February, 2011

சிட்டி கார்களை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா அறிவிப்பு

இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலின் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வீஸ் என்ஜினியர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.சரியான வடிவமைப்புடனும்,தரத்துடன் இல்லாததால் எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற ஹோண்டா நிறுவனம் திரும்ப பெற உள்ளது.
இதுதொடர்பாக,ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மூன்றாம் தலைமுறை சிட்டி கார் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்தன.இதையடுத்து,2008 நவம்பர் முதல் 2009 டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களில் புதிய லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கை இலவசமாக பொருத்தி தர முடிவு செய்துள்ளோம்.

சர்வதேச அளவில் 6,93,497 சிட்டி கார்களை திரும்ப பெறப்பட உள்ளது.இந்தியாவில் 57,853 சிட்டி கார்கள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறி்த்து வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும்.
கார்களை திரும்ப பெறும் பணிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும்.லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கால், இதுவரை பெரிய பிரச்சினைகள் ஏதும் வரவில்லை.இருப்பினும்,வாடிக்கையாளர்களின் நலன் கருதி,முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் 2011: திமுக-பாமக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும், பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் இதே போன்று 31 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
அப்போது அக்கட்சி 18 இடங்களில் வென்றது. அதன் பிறகு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்ற தேர்தலில் அ இ அ தி மு க கூட்டணியில் அது இணைந்து போட்டியிட்டது.
ஆனால் தாம் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலுமே பாமக தோல்வியடைந்திருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லியில் பாமகவுடன் கூட்டு என்று கருணாநிதி அறிவிக்க, அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ராமதாஸ் கூற, கூட்டணி பற்றிய கேள்விகள் எழுந்தன.
திமுக கூட்டணியில் பாமகவைத் தவிர விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் உட்பட சில கட்சிகள் உள்ளன.
இதனிடையே பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Thursday 17 February, 2011

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்:ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு

சென்னை: புதிய மாடல்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில்,ஐகான் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவனம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் முத்திரை பதித்த மாடல்களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது.கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனைகாலம் வந்தது.
இந்தநிலையில்,ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது.இதையடுத்து,பிகோ உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஐகான் கார் உற்பத்தியை ஃபோர்டு இந்தியா படிப்படியாக குறைத்தது.
பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்ட நகரங்களில் ஃபோர்டு ஐகான் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து,கடந்த 1ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் ஃபோர்டு ஐகான் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியாவின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மைக்கேல் போனிகாம் கூறியதாவது: "இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த மாடல் என்று ஐகானை கூறினால் அது மிகையாகாது.ஆனால்,புதிய மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஃபோர்டு ஐகான் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று.
மேலும்,சர்வதேச சந்தையை கருத்தில்கொண்டு 2015ம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதில்,சலூன் வடிவமைப்பை கொண்ட பியஸ்ட்டா கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
ஃபோர்டு ஐகான் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும்,வாடிக்கையாளர்கள் கவலைகொள்ள தேவையில்லை. ஐகானுக்கு தொடர்ந்து சர்வீஸ் வசதி,உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்கும்," என்று கூறினார்.