Sunday, 20 March, 2011

தேர்தலில் போட்டியில்லை - மதிமுக

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை மதிமுகவுக்கு இல்லை என்றும் மதிமுக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Monday, 14 March, 2011

அதிமுக- கம்யூனிஸ்ட் உடன்பாடு

அஇஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்)க்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ)க்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது.
வைகோவின் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும்தான் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகே அதிமுக போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்.
அதிமுக கூட்டணியில் இதுவரையான தொகுதிப்பங்கீடு: தேமுதிக - 41, சிபிஎம் - 12, சிபிஐ - 10, மனித நேய மக்கள் கட்சி - 3, புதிய தமிழகம் , அகில இந்திய சமத்துவ் மக்கள் கட்சி - தலா 2, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை - தலா 1.

Thursday, 10 March, 2011

அ.தி.மு.க. அணியில் சரத்குமார் கட்சிக்கு 2 இடம்

அ.தி.மு.க. அணியில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அக்கட்சியுடன் இணைந்த நாடார் சங்கங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சரத்குமார் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அ.தி.மு.க. அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அதனுடன் இணைந்த நாடார் அமைப்புகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஒப்பந்தத்தில் ஜெயலலிதா, சரத்குமார், திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Tuesday, 8 March, 2011

திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

மார்ச் 8- திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.

இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் இன்று தில்லியில் தெரிவித்தார்.

முன்னதாக, சோனியாவின் வீட்டில் திமுக சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.

Saturday, 5 March, 2011

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிவு

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.
இத்தகைய நிலையில் தி.மு.கவின் உயர்நிலை குழு கூட்டம் கூடியது.
இதன் முடிவில், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் நியாயமற்ற வகையில் இருந்ததால் தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுக்க போவதாகவும் தி.மு.க கூறியுள்ளது.

Friday, 4 March, 2011

விஜயகாந்த்-ஜெயலலிதா கூட்டணி

தேமுதிகவுக்கு 41 இடங்கள் : விஜயகாந்த்-ஜெயலலிதா பேச்சுவார்த்தையில்
உடன்பாடு.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்தது.
தேமுதிக கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் அதிமுக முக்கிய பிரமுகர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இரவு 9.30 மணி முதல் 9.50 வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.   இந்த சந்திப்பின் போது தொகுதி குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.    தொகுதி உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சியுடன்  வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்.