Wednesday, 30 September, 2009

தேக்கடி படகு கவிழ்ந்ததில் பலியானோர் 38

கேரள மாநிலம் தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 38 பேரின் உடல் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் ஏற்றிச் சென்று, அங்கு நீரருந்த வரும் யானைகள் உள்ளிட்ட விலங்குளை காட்டுவர். இந்தப் படகுகளை கேரள மாநில சுற்றுலாத் துறை இயக்கிவருகிறது.
அப்படி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இன்று மதியம் கவிழ்ந்தது. இதில் இருந்த 76 சுற்றுலாப் பயணிகள் நீரில் முழ்கினர். தேக்கடியில் நடுப்பகுதியில் இது நடந்ததால் விபத்து விவரம் தெரிவதற்கே கால தாமதமாகியுள்ளது. விவரம் கிடைத்ததும் மீட்புப் பணிகள் துவங்கியது.
இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 38 உடல்கள் இரவு 8.00 மணி வரை மீட்கப்பட்டுள்ளன. நீரில் தத்தளித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரும் ஒருவர். இவர் தனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்ததாக கதறிக் கொண்டு கூறியுள்ளார்.
தற்பொழுது அப்பகுதியில் மழை பொழியத் துவங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாப் படகில் 50 பேர் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், ஆனால் விபத்திற்குள்ளான படகில் மிக அதிகமாக 76 பேர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அதனால்தான் படகு கவிழ்ந்தது என்றும் செய்திகள் கூறுகின்றன.

Tuesday, 29 September, 2009

ஆர்த்தி-மாஸ்டர் கணேஷ் அக். 23ல் குருவாயூரில் திருமணம்

சி‌னிமா ம‌ற்று‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் நகைச்சுவை பா‌த்‌திர‌ம் ஏ‌ற்று நடி‌க்கு‌ம் நடிகை ஆர்த்தியும் நடிகர் மாஸ்டர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் திருமணம் அக்டோபர் 23-ந் தேதி குருவாயூ‌ர் கோவிலில் நடக்கிறது.
ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் ப‌ல்வேறு படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் மாஸ்டர் கணேசுக்கும் காதல் ஏ‌ற்ப‌ட்டு அது ‌திரு‌மண‌த்‌தி‌ல் முடி‌கிறது.
இவ‌ர்களது காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட இருவரது பெ‌ற்றோ‌ர்க‌ள் கல‌ந்து பே‌சி அக்டோபர் 23-ந் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் ‌திருமண‌த்தை நட‌த்த முடிவெடு‌த்து‌ள்ளன‌ர். மணமக்க‌ள் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. மணமகள் ஆர்த்தி நடித்து கொண்டே ஐ.ஏ.எஸ். படித்து வருகிறார். இதுவரை 3 முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருக்கிறார்.
த‌ங்களது காத‌ல் ‌திருமண‌ம் ப‌ற்‌றி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஆ‌ர்‌த்‌தி, நானு‌ம் கணேசு‌‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் இணை‌ந்து ப‌ணியா‌ற்று‌கிறோ‌ம். எங்கள் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம், தங்கவேலு-சரோஜா ஜோடிகளை போல் நானும் கணேசும் சிறந்த நகைச்சுவை ஜோடியாக திரையுலகில் வாழ்ந்து காட்டுவோம் எ‌ன்று நடிகை ஆர்த்தி கூறினார்.

Friday, 25 September, 2009

குட்டி கார் தயாரிப்பில் இறங்கிய போர்ட் - ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

செப்டம்பர் 24,இன்று டெல்லியில் நடந்த விழாவில் தனது குட்டி காரான பிகோவை போர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முலாலி அறிமுகம் செய்தார்.
இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் 75 சதவீதம் குட்டி கார்கள் என்பதால் சூசுகி, டாடாவுக்கு போட்டியாக போர்டும் பிகோ கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த கார்கள் சென்னை போர்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
போர்டு நிறுவனம் 1996ம் ஆண்டில் சென்னை மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இதில் 2,100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தத் தொழிற்சாலையை ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவவும் போர்டு இந்தியா முடிவு செய்துள்ளது.
இதனால் சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவுள்து.
இதன்மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் , இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது

Monday, 21 September, 2009

ஐநா சபைக்கூட்டத்தில் இந்திய சிறுமி உரை

நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் முன்னிலையில், சுற்றுச் சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவின் லக்னோ நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்று உரையாற்ற இருக்கிறாள்.
யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா என்ற அந்த சிறுமி, லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறாள.
ஐக்கிய நாடு சபையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக "புவி வெப்பமடைதல்" குறித்து பேச உள்ளாள் இந்த சிறுமி.
இந்த கூட்டத்துக்கு ஐ.நா.பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.இந்தியா சார்பில் அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறாள் யுக்ரத்னா.
ஐ.நா.வில் உரையாற்ற உள்ளது குறித்து சிறுமி யுக்ரத்னா கூறுகையில்," ஒபாமாவிடம் உங்களின் கொள்கைகள் எங்களை பாதிக்கலாம். நீங்கள் இப்போதே சரியான முடிவை எடுத்தால் எங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் " என தாம் கூற இருப்பதாக தெரிவித்தாள்.

Thursday, 17 September, 2009

எம்.பி.பி.எஸ். கல்விக் கட்டணம் ரூ.250: ஜிப்மரில் தொடரும் பாரம்பரிய பெருமை

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 250 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
1964-லிருந்து இக் கட்டணத்தை ஜிப்மர் நிர்வாகம் மாற்றாமல் உள்ளது. மேலும் நூலகம், விளையாட்டு, வளர்ச்சி நிதி போன்ற வகையில் ரூ. 3,906 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஆயிரம் ரூபாய் மாணவர்கள் படிப்பை முடித்துச் செல்லும்போது திரும்ப வழங்கப்படுகிறது.
சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்கூட எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு மாதம் ரூ. 500 முதல் 1000 வரை வசூலிக்கப்படுகிறது. நன்கொடை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நம் நாட்டில் இப்படியொரு கல்வி நிறுவனம் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ஜிப்மரில் பணியாற்றும், நோய் தடுப்பு மற்றும் சமூகவியல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் பாலசுதர்சனன் கூறுகையில், ""ஜிப்மரில் நானும் ரூ.250 கொடுத்துதான் படித்தேன். இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களும் ரூ. 250தான் கொடுத்து படிக்கின்றனர்'' என்றார்.
நாட்டிலேயே புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையிலும் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவக் கல்லூரியிலும்தான் இந்த அளவுக்கு குறைவான படிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஜிப்மர் டீன் கே.எஸ். ரெட்டி கூறினார்.
""இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. தில்லியில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மத்திய அரசின் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியில் படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது'' என்றார்.
புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாறிவிட்டன. இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை. அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணயக் குழு மீதியுள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இக் கல்லூரிகளிலும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் ரூ. 1.5 லட்சம் முதல் 1.75 வரை வசூலிக்க கட்டண நிர்ணய குழு அனுமதி அளித்துள்ளது. அதைத் தவிர கூடுதல் கட்டணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரை வசூல் செய்து கொள்ளலாம்.
புதுச்சேரியில் மருத்துவக் கல்விக்காக அதிகம் வசூலிக்கும் கல்லூரியும் இருக்கிறது. குறைந்தக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரியும் இருக்கிறது. ஆனால் புதுச்சேரி அரசுக்கென்று இதுவரை சொந்த மருத்துவக் கல்லூரி கிடையாது. இதற்காக தொடங்கப்பட்ட கட்டடப் பணி பாதியில் நிற்கிறது.

Wednesday, 16 September, 2009

தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்

சென்னை, செப்.16- பிரபல தமிழ்ப் பேச்சாளர் தென்கச்சி சுவாமிநாதன் (63) இன்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
தென்கச்சி சுவாமிநாதன் அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். நல்ல கருத்துக்களை நகைச்சுவையான பாணியில் அவர் கூறி வந்தது அவருக்கு ஏராளமான வானொலி நேயர்களைப் பெற்றுத் தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வந்தார்.
இவர் சிறுகதைகளும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஆதரவாளர்களாலும் நேயர்களாலும் இவர் தென்கச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.

Saturday, 12 September, 2009

போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அடுத்த ஆண்டு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் போலோ உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்து கொள்கிறது.
இந்தியா கலந்து கொள்ளும் போட்டி வாஷி்ங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் நடைபெறும்.
போட்டித் தொடக்க விழாவில் இசை ப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல பாப் குழுவான புஸ்ஸிகேட் டால் குழுவினருடன் இணைந்து ரஹ்மான் நிகழ்ச்சியை வழங்குகிறார்.