Thursday 28 July 2011

குஜராத்தில் இரண்டவது கார் ஆலை: ஃபோர்டு

அமெரிக்காவின் பிரபல போர்ட் கார் நிறுவனம் இந்தியாவில் மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவ இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தத் தொழிற்சாலை, சுமார் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என போர்ட் நிறுவன தலைமை நிர்வாகி ஜோன் ஹின்ரிக்ஸ் தெரிவித்தார்.
சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்தப் புதிய தொழிற்சாலையில், சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் கார்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படும் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் போர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday 19 May 2011

58வது தேசிய திரைப்பட விருதுகள் - தமிழுக்கு 14

தேசிய திரைப்பட விருதுகள் இன்று தில்லியில் அறிவிக்கப்பட்டன.
இதில், நடிகர் தனுஷ்க்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது.
ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிஷோருக்குக் கிடைத்துள்ளது.
ஆடுகளத்தில் நடித்த ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது (படம் - தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த நடன அமைப்புக்கான விருது ஆடுகளம் படத்தின் நடன இயக்குநர் தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது.
எந்திரன் - சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.
எந்திரன் - சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.
சிறந்த தமிழ்ப் படம் - தென்மேற்கு பருவக்காற்று
மைனா படத்தில் நடித்த தம்பி ராமய்யாவுக்கு சிறந்த துணை நடிகர் விருது.
சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

Wednesday 27 April 2011

இந்திய அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமனம்

கேரி கிர்ஸ்டனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பல வாரங்களாக நீடித்துவந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
ஃபிளட்சர் ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர். 1999-ல் இருந்து 2007 வரை இங்கிலாந்துக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பார்.
பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டத்தில் ஃபிளட்சரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
ஃபிளட்சர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில பணிகளை செய்யவேண்டி இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியுடன் அவர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகலாம் என பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
கிர்ஸ்டனின் பதவிக்காலத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ், அதே பதவியில் தொடர்வார் என அவர் குறிப்பிட்டார்.
ஃபிளட்சர் 1983 உலகக் கோப்பை போட்டியின்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்தவர். சர்வதேச அளவில் 6 ஒருதினப் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார்.

Sunday 20 March 2011

தேர்தலில் போட்டியில்லை - மதிமுக

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை மதிமுகவுக்கு இல்லை என்றும் மதிமுக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Monday 14 March 2011

அதிமுக- கம்யூனிஸ்ட் உடன்பாடு

அஇஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்)க்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ)க்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது.
வைகோவின் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும்தான் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகே அதிமுக போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்.
அதிமுக கூட்டணியில் இதுவரையான தொகுதிப்பங்கீடு: தேமுதிக - 41, சிபிஎம் - 12, சிபிஐ - 10, மனித நேய மக்கள் கட்சி - 3, புதிய தமிழகம் , அகில இந்திய சமத்துவ் மக்கள் கட்சி - தலா 2, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை - தலா 1.

Thursday 10 March 2011

அ.தி.மு.க. அணியில் சரத்குமார் கட்சிக்கு 2 இடம்

அ.தி.மு.க. அணியில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அக்கட்சியுடன் இணைந்த நாடார் சங்கங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சரத்குமார் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அ.தி.மு.க. அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அதனுடன் இணைந்த நாடார் அமைப்புகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஒப்பந்தத்தில் ஜெயலலிதா, சரத்குமார், திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Tuesday 8 March 2011

திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

மார்ச் 8- திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.

இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் இன்று தில்லியில் தெரிவித்தார்.

முன்னதாக, சோனியாவின் வீட்டில் திமுக சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.

Saturday 5 March 2011

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிவு

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.
இத்தகைய நிலையில் தி.மு.கவின் உயர்நிலை குழு கூட்டம் கூடியது.
இதன் முடிவில், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் நியாயமற்ற வகையில் இருந்ததால் தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுக்க போவதாகவும் தி.மு.க கூறியுள்ளது.

Friday 4 March 2011

விஜயகாந்த்-ஜெயலலிதா கூட்டணி

தேமுதிகவுக்கு 41 இடங்கள் : விஜயகாந்த்-ஜெயலலிதா பேச்சுவார்த்தையில்
உடன்பாடு.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்தது.
தேமுதிக கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் அதிமுக முக்கிய பிரமுகர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இரவு 9.30 மணி முதல் 9.50 வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.   இந்த சந்திப்பின் போது தொகுதி குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.    தொகுதி உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சியுடன்  வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்.

Friday 18 February 2011

சிட்டி கார்களை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா அறிவிப்பு

இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலின் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வீஸ் என்ஜினியர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.சரியான வடிவமைப்புடனும்,தரத்துடன் இல்லாததால் எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற ஹோண்டா நிறுவனம் திரும்ப பெற உள்ளது.
இதுதொடர்பாக,ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மூன்றாம் தலைமுறை சிட்டி கார் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்தன.இதையடுத்து,2008 நவம்பர் முதல் 2009 டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களில் புதிய லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கை இலவசமாக பொருத்தி தர முடிவு செய்துள்ளோம்.

சர்வதேச அளவில் 6,93,497 சிட்டி கார்களை திரும்ப பெறப்பட உள்ளது.இந்தியாவில் 57,853 சிட்டி கார்கள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறி்த்து வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும்.
கார்களை திரும்ப பெறும் பணிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும்.லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கால், இதுவரை பெரிய பிரச்சினைகள் ஏதும் வரவில்லை.இருப்பினும்,வாடிக்கையாளர்களின் நலன் கருதி,முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் 2011: திமுக-பாமக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும், பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் இதே போன்று 31 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
அப்போது அக்கட்சி 18 இடங்களில் வென்றது. அதன் பிறகு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்ற தேர்தலில் அ இ அ தி மு க கூட்டணியில் அது இணைந்து போட்டியிட்டது.
ஆனால் தாம் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலுமே பாமக தோல்வியடைந்திருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லியில் பாமகவுடன் கூட்டு என்று கருணாநிதி அறிவிக்க, அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ராமதாஸ் கூற, கூட்டணி பற்றிய கேள்விகள் எழுந்தன.
திமுக கூட்டணியில் பாமகவைத் தவிர விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் உட்பட சில கட்சிகள் உள்ளன.
இதனிடையே பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Thursday 17 February 2011

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்:ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு

சென்னை: புதிய மாடல்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில்,ஐகான் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவனம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் முத்திரை பதித்த மாடல்களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது.கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனைகாலம் வந்தது.
இந்தநிலையில்,ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது.இதையடுத்து,பிகோ உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஐகான் கார் உற்பத்தியை ஃபோர்டு இந்தியா படிப்படியாக குறைத்தது.
பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்ட நகரங்களில் ஃபோர்டு ஐகான் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து,கடந்த 1ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் ஃபோர்டு ஐகான் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியாவின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மைக்கேல் போனிகாம் கூறியதாவது: "இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த மாடல் என்று ஐகானை கூறினால் அது மிகையாகாது.ஆனால்,புதிய மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஃபோர்டு ஐகான் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று.
மேலும்,சர்வதேச சந்தையை கருத்தில்கொண்டு 2015ம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதில்,சலூன் வடிவமைப்பை கொண்ட பியஸ்ட்டா கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
ஃபோர்டு ஐகான் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும்,வாடிக்கையாளர்கள் கவலைகொள்ள தேவையில்லை. ஐகானுக்கு தொடர்ந்து சர்வீஸ் வசதி,உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்கும்," என்று கூறினார்.

Saturday 15 January 2011

பெட்ரோல் விலை - ஒரு பார்வை

Source : IOCL

Thursday 13 January 2011

தமிழக மீனவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து துப்பாக்கி சூடு குறித்த விவரங்களை இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரியுள்ளார். கதாப்பட்டிணம் மீனவர் பாண்டியன் நேற்று இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார்.
இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.  நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.
 இந்திய கடல் எல்லைக்குள் 14 "நாட்டிக்கல்' மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், ஜகதாப்பட்டினம் கடற்கரையில் பரபரப்பு நிலவுகிறது.

Wednesday 12 January 2011

பொங்கலுக்கு 5 கேரள மாவட்டங்களில் அரசு விடுமுறை

பொங்கலுக்கு கேரளத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேரளத்தை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.

Tuesday 11 January 2011

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.

Monday 10 January 2011

அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்பேன்: சீமான்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.

 மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் "நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமான் திங்கள்கிழமை சந்தித்தார். சுமார் 40 நிமிஷ சந்திப்புக்குப் பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியது: "தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது, இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவது குறித்து சீமான் பேசியதற்காக அவரைத் தமிழக அரசு கைது செய்தது. அதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. 
சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டப்படியான வழகு தவறு என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. சீமான் எந்தத் தவறும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை யாராலும் தடுக்க முடியாது. வரப்போகும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்' என்றார். 
இதைத்தொடர்ந்து சீமான் கூறியது: "தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த என்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அதற்கு நன்றி சொல்வதற்காக அவரைச் சந்தித்தேன். 
வரப்போகும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள். வைகோ பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் இருந்துவிட்டார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் கூறினேன். யோசிக்கிறேன் என்று கூறியுள்ளார். 
காங்கிரஸ், திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு பெரிய கட்சி அதிமுக தான். எனவே இந்த முறையும் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன்' என்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் 2011: பயஸ்-பூபதி சாம்பியன்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்-பூபதி ஜோடி 5-வது முறையாக பட்டம் வென்றது.
 இவர்கள் 6-2, 6-7, 10-7 என்ற கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-அமெரிக்காவின் டேவிட் மார்டின் ஜோடியை வென்றது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களம் கண்ட இந்திய ஜோடி, 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றது. இந்த செட்டில் பயஸ்-பூபதி நேர்த்தியான ஷாட்களை அடித்ததோடு, முன்கள ஆட்டத்தைக் கையாண்டு நெட்டுக்கு அருகிலேயே பந்தை தட்டிவிட்டு புள்ளிகளைப் பெற்றது. 
இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் பயஸின் சர்வீûஸ முறியடித்தது மார்ட்டின் ஜோடி. அதற்குப் பதிலடி தரும் வகையில் அடுத்த கேமில் மார்டின் ஜோடியின் சர்வீûஸ முறியடித்தது இந்திய ஜோடி. இருப்பினும் இந்த செட்டை இந்திய ஜோடி 6-7 என்ற கணக்கில் இழந்தது. 
இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் 5 கேம்களின் முடிவில் மார்ட்டின் ஜோடி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  அடுத்து நடைபெற்ற கேம், இந்திய ஜோடிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 6-வது கேமில் இருந்து அடுத்த 3 கேம்களையும் வென்று 4-4 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது இந்திய ஜோடி.
9-வது கேமில் மார்ட்டின் ஜோடி தொடர்ந்து இரு முறை நெட்டில் அடிக்கவே பயஸ்- பூபதி ஜோடி 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற கேம்களில் மகேஸýம், பூபதியும் ஆக்ரோஷமாக ஆடினர். இறுதியில் இந்திய ஜோடி 10-7 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றது. வெற்றி உற்சாகத்தல் பயஸ் பாய்ந்து சென்று மகேஸ் பூபதியைக் கட்டிப்பிடித்து அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தார். 
இந்த வெற்றி மூலம் சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது இந்த ஜோடி. 1997, 1998, 1999, 2002 ஆகிய ஆண்டுகளில் இந்த ஜோடி சென்னை ஓபனில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday 4 January 2011

கற்பழித்த எம்.எல்.ஏவை குத்திக் கொன்ற பெண்

பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை கற்பழித்தாக புகார் அளித்திருந்தார்.
பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் கேசரி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கேசரியும், அவரது அடியாட்களும் கடந்த மூன்று வருடமாக கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்ததாக கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை சிபாஹி தோலாவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றார் பூனம். அங்கு தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கேசரி. அவரிடம் சென்ற பூனம், கேசரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக கேசரியைக் குத்தினார். இதில் நிலை குலைந்த கேசரி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பீகாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட கேசரிக்கு 51 வயதாகிறது. நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
கேசரியை சரமாரியாக குத்திக் கொன்ற பூனை அங்கிருந்தவர்ள் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்ததில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.