Sunday 11 April, 2010

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.
உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...
1. opera mini browser open செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)
3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.
பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.
Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

மாநிலங்களவையில் 100 கோடீஸ்வர எம்பிக்கள்

ஏப்.11: மாநிலங்களவை எம்பிக்களில் சுமார் 100 பேர் தங்களுக்கு 1 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒரு தனியார் தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் இந்த விவரங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல தொழிலதிபரும், சுயேச்சை எம்பியுமான ராகுல் பஜாஜ், தனக்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக 300 கோடிக்கு மேல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பின்படி மாநிலங்களவை எம்பிக்களில் அதிக சொத்து உள்ளவர்களில் பஜாஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக மதச்சார்பற்ற ஜனதாதள எம்பி எம்ஏஎம்.ராமசாமி தனக்கு ரூ 278 கோடி சொத்து இருப்பதாகவும், காங்கிரஸ் எம்பி சுப்ரமணி ரெட்டி தனக்கு ரூ 272 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்பி ஜெயா பச்சனுக்கு ரூ 215 கோடி மதிப்பிலும், சமாஜவாதிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங் எம்பிக்கு ரூ 79 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக தனியார் தொண்டுநிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவித்தன.

Monday 5 April, 2010

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.
44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி. தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து.
தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம். மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு. சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார்.
சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார். அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார்.
இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக‍!

பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது இதுவே முதல் முறை. பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 198 உறுப்பினர் பதவிகள் கொண்ட மாநகராட்சியில், மாலை நிலவரப்படி 112 இடங்களில் பாஜக வெற்றியடைந்து முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 62 வார்டுகளிலும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 இடங்களையும் பெற்றுள்ளன. மற்றவை 7 வாட்டுகளில் வெற்றியடைந்துள்ளன.
பெங்களூரில் வெற்றி முகத்துடன் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, 'நன்றாக பணியாற்றினால், வளர்ச்சியில் உண்மையாக அக்கறை காட்டினால் மக்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள் என்பதற்கு இந்த வெற்றியை விட சிறந்த உதாரணத்தை நாம் தேட வேண்டியதில்லை' என்றார்.

Saturday 3 April, 2010

அங்காடி தெரு - விமர்சனம்

நம்ம ஊர் பிள்ளைங்க, நம்ம ஜாதி பசங்க... என ஊரில் இருந்து படிக்கற பசங்களை பாதியில் அழைத்து வந்து தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களை அடிமைகளை விட கொடுமையாக நடத்தும் முதலாளிகளையும், அவர்களது ஏவல், கூவல் அதிகாரிகளின் முகத்திரைகளையும் கிழித்திருக்கும் வித்தியாசமான... அதேசமயம் விறுவிறுப்பான படம் அங்காடி தெரு!
கதைப்படி, சென்னையில் உள்ள ‌பெரி‌ய ஜவுளி மற்றும் பாத்திர, பலசரக்கு கடைக்கு தென் மாவட்டத்தில் இருந்து வேலைக்கு வரும் ஜோதிலிங்கத்துக்கும், அதே கடையில் அவனைப்போலவே விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கும் சேர்மக்கனிக்கும் முதலில் மோதல். அதன் பின் காதல். இந்நிலையில் மே‌னேஜரின் உருட்டல், மிரட்டலால் அதே கடையில் வேலைபார்க்கும் காதல் ஜோடி ஒன்று சித்ரவதைக்குள்ளாகிட, ஸ்பாட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கண்டு சேர்மக்கனியும், ஜோதிலிங்கமும் மிரள,,, ஒரு சமயம் அவர்களது காதலும் நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. அப்புறம்...? அப்புறமென்ன...., அடித்து உதைத்து மிரட்டி உருட்டி பிரிக்கப்படும் காதல் ஜோடி மீண்டும் இணைந்ததா, இல்லையா என்பது உருக்கமான மீதிக் கதை!
பகட்டான பலஅடுக்கு மாட மாளிகைகளின் ஏ.சி. அறையில் வேலை பார்க்கும் விற்பனையாளர்களின் வாழ்வியல் வேதனைகளையும், அவர்களது மற்றொரு புற சோக வாழ்க்கையையும் அலசி, ஆராய்ந்து அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் நிச்சயம் பெரிய டைரக்டர்தான்.

ஜோ‌திலிங்கமாக மகேசும், சேர்மக்கனியாக அஞ்சலியும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்குமிடையில் ஆரம்பத்தில் எழும் மோதல்களும் சரி, அதன்பின் வரும் காதலும் சரி., சபாஷ்... சரியான போட்டி என இருவரது நடிப்பாற்றலையும் மிக துல்லியமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது என்றால் மிகையல்ல! மகேஷ் - அஞ்சலி மட்டுமல்ல... அவர்களது நண்பனாக வரும் பிளாக் பாண்டி, காதலன் வேசி மகள் எனக் கேட்டதால் அத்தனை‌ பேர் கண் முன்னே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் தோழி அஞ்சலியின் த‌ங்கையாக ஒருசில காட்சிகளே வந்தாலும், உயர் சாதியினரின் ஆச்சாரம் அனுஷ்டானத்தால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அனுபவிக்கும் கொடுமையை தோலுரித்து காட்டிட உதவிடும் கேரக்டர், பெரிய ஸ்‌டோர் முதலாளிகளுக்கு போட்டியாக பிளாட்பார்மில் கடை நடத்திடும் இஸ்லாமிய பெரியவர், முட்டை முழியும் - சோடா புட்டி கண்ணாடியுமாக வக்ரமும், ஆக்ரோஷமும் ஒரு‌ங்கே கொண்ட ஸ்டோர் முதலாளியாக இருக்குனர் ஏ.வெங்கடேஷ் கடை உரிமையாளர் அண்ணாச்சியாக பழ.கருப்பையா, ஸ்டோர் விளம்பரத்திற்காக நடிகையாகவே சில காட்சிகளில் வரும் சினேகா, குள்ள மனிதனின் உயர்ந்த பிள்ளைதாச்சி மனைவியாக வந்து ரசிகர்களின் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடிக்கும் சிந்து என ஒவ்வொரு பாத்திரமும் கேரக்டராகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். அத்தனைக்கும் காரணம் இயக்குனர் என்பதும் புரிகிறது.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் என இரண்டு இசையமைப்பாளர்களின் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். பின்னணி இசையும் நல்ல நாதம். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்!