Sunday 27 June, 2010

மாரடைப்பால் சட்டசபை காங். தலைவர் சுதர்சனம் மரணம்

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூவிருந்தவல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல.ஏவுமான சுதர்சனம் நேற்று கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
67 வயதாகும் சுதர்சனம், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். 23ம் தேதி முதலே கோவையில் முகாமிட்டிருந்த அவர் 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
24ம் தேதி இரவு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென சிறுநீருடன் ரத்தம் கலந்து போனது. உடலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சுதர்சனத்தின் நிலைமை மோசமானது. இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சில விநாடிகளில் அவர் உயிரிழந்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். மாநாட்டுத் திடலுக்கும் சுதர்சனம் இறந்த செய்தி பரவியதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விரைந்து சென்று மலர்அஞ்சலி செலுத்தினர். கதறி அழுத சுதர்சனத்தின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
இன்று சுதர்சனத்தின் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
மறைந்த சுதர்சனம், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராவார். காமராஜர் காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர். பின்னாளில் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் வலது கரம் போல திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக 20 வருடங்கள் இருந்தவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ருட்டி கிராமத்தில் 1943ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தவர் சுதர்சனம். பத்தாவது வரை படித்துள்ளார். அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி வரை உயர்ந்தவர்.
கடந்த 1991, 96, 2001 ஆகிய தேர்தல்களில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலிலும் பூந்தமல்லி தொகுதியிலேயே போட்டியிட்டு வென்றார்.
சுதர்சனத்திற்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.