தமிழ் திரையுலகின் முன்னாள் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சந்திரன் அவர்கள், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் வெள்ளிகிழமையன்று அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் சந்திரன். அதன் பிறகு நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.எஸ். சந்திரன், மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரில் இருந்து இன்னாள் நடிகர்கள் வரை உடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் எஸ்.எஸ். சந்திரன்.
திரைப்படங்களில் மட்டுமன்றி, அரசியலிலும் ஈடுபாடு காட்டிய எஸ்.எஸ். சந்திரன், துவக்கத்தில் திமுகவில் செயல்பட்ட போதிலும், அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார். அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் எந்தப் பிரச்சினையிலும், தமிழிலேயே பேசி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன்.
திருவாரூரில் இருந்து அவரது உடல், சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.