கேரி கிர்ஸ்டனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பல வாரங்களாக நீடித்துவந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
ஃபிளட்சர் ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர். 1999-ல் இருந்து 2007 வரை இங்கிலாந்துக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பார்.
பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டத்தில் ஃபிளட்சரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
ஃபிளட்சர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில பணிகளை செய்யவேண்டி இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியுடன் அவர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகலாம் என பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
கிர்ஸ்டனின் பதவிக்காலத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ், அதே பதவியில் தொடர்வார் என அவர் குறிப்பிட்டார்.
ஃபிளட்சர் 1983 உலகக் கோப்பை போட்டியின்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்தவர். சர்வதேச அளவில் 6 ஒருதினப் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார்.