Wednesday 12 May, 2010

4-வது முறையாக ஆனந்த் உலக சாம்பியன்

மே 11: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (40) 4வது முறையாக பெற்றுள்ளார். நடப்பு சாம்பியனான அவர், பல்கேரியாவின் வெஸலின் டொபலோவை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஆனந்த் 6.5 - 5.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பட்டம் வென்றார்.
11 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் கடைசி சுற்று ஆட்டம் செவ்வாய்க்கிழமை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. கடைசி சுற்று ஆட்டத்தில் கறுப்பு காயுடன் விளையாடினார் ஆனந்த்.
கடைசி ஆட்டமும் டிரா ஏற்பட்டு, பின்னர் டைபிரேக்கரில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனந்த் அதிரடியாக விளையாடி பட்டத்துக்கான புள்ளிகளை வென்றார். 32வது நகர்த்தலின்போது செய்த சிறிய தவறால் டொபலோவ் நிதானம் இழந்தார். அதேசமயம் 40வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தாலும், அது அவரது ஆட்டத்தின் போக்கை மாற்றவில்லை. எனினும் 56 நகர்த்தலில் ஆனந்த் வென்று பட்டம் வென்றார்.
ஆனந்தின் சாதனைகள்: உலக சாம்பியன் பட்டங்கள் - 2000, 2007, 2008, 2010;
5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகள், 1987-ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. செஸ் ஆட்டத்தில் நாக்அவுட், டோர்ணமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment