Thursday 19 August, 2010

டாப் 10 உலகத் தலைவர்களில் மன்மோகனுக்கு முதலிடம்

அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறவில்லை.
உலக நாட்டு தலைவர்களின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த தலைவர்களை தேர்வு செய்வதற்கான தலைவர்களை நேசிக்கும் தலைவர் என்ற தலைப்பில் கருத்தை மையமாக கொண்டு உலகில் உள்ள தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்வு செய்து அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை கணித்து அறிவித்து உள்ளது.
இதில் மன்மோகன் சிங்குக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது நியூஸ் வீக். 2வது இடம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் டேவிட் காமரூனுக்கும், 3வது இடம், மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத்துக்கும் கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்குறித்து நியூஸ்வீக் கூறுகையில், முன்னாள் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், 21வது நூற்றாண்டின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர். தேங்கிக் கிடந்த சோஷலிச இந்தியாவிலிருந்து உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர்.
இந்தியாவின் இந்த மிகப் பெரிய மாற்றத்திற்கு மன்மோகன் சிங் மட்டுமே தனிப் பொறுப்பாவார். அவரது திறமையும், செயல்பாடுமே இதற்கு முக்கியக் காரணம். உலகளாவிய தலைவர்கள் மத்தியில் தனித்து தெரிகிறார் மன்மோகன் சிங்.
ஊழலற்ற, எளிமையான தலைவராக விளங்கி வருவது அவரது தனிச் சிறப்பு. ஒரு உலகத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் தான் சரியான உதாரணம் என்று முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் எல்பராதே கூறியது குறிப்பிடத்தக்கது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, 5வது இடத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உள்ளனர்.
உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறாதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதேபோல உலகின் 100 சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment