கூட்டணி தொடர்பான முடிவுகளை இப்போது தெரிவிக்க முடியாது. ஆனால், மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:-
மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும். தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் பற்றியெல்லாம் இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. சுயமரியாதையை நிலைநாட்டும் வகையில் எங்கள் முடிவுகள் இருக்கும்.
மக்களவைத் தேர்தலில் நான் (வைகோ) போட்டியிடுவது பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால் கட்சி போட்டியிடும்.
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') தன் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
"டிராய்' தமிழக அரசுக்கு கேபிள் டிவிக்கு உரிமம் வழங்க முன் வரவேண்டும். குறைவான செலவில் அதிக சேனல்களை மக்கள் பார்க்கலாம் எனும்போது, அதை வழங்குவதில் தவறில்லை.
நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டு விலகியதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்க கடுமையான தண்டனைகள் வழங்குவதுதான் தீர்வாக அமையும் என்று நான் கருதவில்லை. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுதான் முக்கிய காரணம்.
எனவே, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு மகளிர் பேராதரவு தருகின்றனர்.
காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment