Saturday, 3 April, 2010

அங்காடி தெரு - விமர்சனம்

நம்ம ஊர் பிள்ளைங்க, நம்ம ஜாதி பசங்க... என ஊரில் இருந்து படிக்கற பசங்களை பாதியில் அழைத்து வந்து தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களை அடிமைகளை விட கொடுமையாக நடத்தும் முதலாளிகளையும், அவர்களது ஏவல், கூவல் அதிகாரிகளின் முகத்திரைகளையும் கிழித்திருக்கும் வித்தியாசமான... அதேசமயம் விறுவிறுப்பான படம் அங்காடி தெரு!
கதைப்படி, சென்னையில் உள்ள ‌பெரி‌ய ஜவுளி மற்றும் பாத்திர, பலசரக்கு கடைக்கு தென் மாவட்டத்தில் இருந்து வேலைக்கு வரும் ஜோதிலிங்கத்துக்கும், அதே கடையில் அவனைப்போலவே விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கும் சேர்மக்கனிக்கும் முதலில் மோதல். அதன் பின் காதல். இந்நிலையில் மே‌னேஜரின் உருட்டல், மிரட்டலால் அதே கடையில் வேலைபார்க்கும் காதல் ஜோடி ஒன்று சித்ரவதைக்குள்ளாகிட, ஸ்பாட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கண்டு சேர்மக்கனியும், ஜோதிலிங்கமும் மிரள,,, ஒரு சமயம் அவர்களது காதலும் நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. அப்புறம்...? அப்புறமென்ன...., அடித்து உதைத்து மிரட்டி உருட்டி பிரிக்கப்படும் காதல் ஜோடி மீண்டும் இணைந்ததா, இல்லையா என்பது உருக்கமான மீதிக் கதை!
பகட்டான பலஅடுக்கு மாட மாளிகைகளின் ஏ.சி. அறையில் வேலை பார்க்கும் விற்பனையாளர்களின் வாழ்வியல் வேதனைகளையும், அவர்களது மற்றொரு புற சோக வாழ்க்கையையும் அலசி, ஆராய்ந்து அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் நிச்சயம் பெரிய டைரக்டர்தான்.

ஜோ‌திலிங்கமாக மகேசும், சேர்மக்கனியாக அஞ்சலியும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்குமிடையில் ஆரம்பத்தில் எழும் மோதல்களும் சரி, அதன்பின் வரும் காதலும் சரி., சபாஷ்... சரியான போட்டி என இருவரது நடிப்பாற்றலையும் மிக துல்லியமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது என்றால் மிகையல்ல! மகேஷ் - அஞ்சலி மட்டுமல்ல... அவர்களது நண்பனாக வரும் பிளாக் பாண்டி, காதலன் வேசி மகள் எனக் கேட்டதால் அத்தனை‌ பேர் கண் முன்னே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் தோழி அஞ்சலியின் த‌ங்கையாக ஒருசில காட்சிகளே வந்தாலும், உயர் சாதியினரின் ஆச்சாரம் அனுஷ்டானத்தால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அனுபவிக்கும் கொடுமையை தோலுரித்து காட்டிட உதவிடும் கேரக்டர், பெரிய ஸ்‌டோர் முதலாளிகளுக்கு போட்டியாக பிளாட்பார்மில் கடை நடத்திடும் இஸ்லாமிய பெரியவர், முட்டை முழியும் - சோடா புட்டி கண்ணாடியுமாக வக்ரமும், ஆக்ரோஷமும் ஒரு‌ங்கே கொண்ட ஸ்டோர் முதலாளியாக இருக்குனர் ஏ.வெங்கடேஷ் கடை உரிமையாளர் அண்ணாச்சியாக பழ.கருப்பையா, ஸ்டோர் விளம்பரத்திற்காக நடிகையாகவே சில காட்சிகளில் வரும் சினேகா, குள்ள மனிதனின் உயர்ந்த பிள்ளைதாச்சி மனைவியாக வந்து ரசிகர்களின் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடிக்கும் சிந்து என ஒவ்வொரு பாத்திரமும் கேரக்டராகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். அத்தனைக்கும் காரணம் இயக்குனர் என்பதும் புரிகிறது.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் என இரண்டு இசையமைப்பாளர்களின் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். பின்னணி இசையும் நல்ல நாதம். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்!

No comments:

Post a Comment