தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, 17 July 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment