Tuesday 20 July, 2010

லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!

லண்டன்: உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.
ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.

2 comments:

கோவி.கண்ணன் said...

மகிழ்ச்சியான தகவல், உலகமெங்கும் தமிழ்/தமிழர் பரவலாகுவது மிக்க மகிழ்ச்சி

Karthick Chidambaram said...

மகிழ்ச்சியான தகவல்

Post a Comment