Sunday, 12 September 2010

Mehandi designed by me to Amritha

2014ல் உலகப் பெரும் பணக்காரராக முகேஷ் - போர்ப்ஸ்

2014ம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உயர்வார் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 பில்லியன் டாலர்களாகும். ஆனால் இன்னும் 4 ஆண்டுகளில் இது 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்து உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுப்பார் முகேஷ். இதன் மூலம் உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கும் மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம்மை பின்னுக்குத் தள்ளி விடுவார் முகேஷ் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
மெக்சிகோவில் நிலவி வரும் அரசியல் , பொருளாதார குழப்பங்களால் கார்லோஸின் சொத்து மதிப்பு குறைந்து விடும் எனவும் போர்ப்ஸ் கணித்துள்ளது.
53 வயதாகும் முகேஷ் தற்போது போர்ப்ஸின் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம் , தமிழ், கன்னடம், தெலுங்கு , இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார்.
1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சொர்ணலதா. சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.
அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி...' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

Wednesday, 8 September 2010

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.
மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.
முரளியின் உடல் நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி. முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

Thursday, 2 September 2010

சென்னைக்கு வரும் கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம், சென்னை அருகே தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. ரூ. 7000 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை அமைக்கவுள்ளது கியா.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ. 12,000 கோடி அளவுக்கு முதலீடுகளைக் கவர திட்டமிட்டிருந்துத தமிழக அரசு. ஆனால் அந்த அளவை தாண்டிவிட்டது முதலீடுகளின் அளவு. இந்த நிதியாண்டு இறுதியில் ரூ.20,000 கோடி அளவை முதலீடுகள் தாண்டும் என எதிர்பார்க்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் ஏற்கனவே தயாரிப்பு தொழிற்சாலையை வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு கியா மோட்டார்ஸில் 35 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கவுள்ள தொழிற்சாலையில், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது கியா மோட்டார்ஸ். இங்கு 2012ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் எனத் தெரிகிறது.
கியா மோட்டார்ஸும், ஹூண்டாயும் இணைந்து இந்திய மார்க்கெட்டில் பெரும் பங்கை வகிக்கும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உலகப் புகழ் பெற்ற 10 ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது 2ம் நிலை ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் தமிழகம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.