Thursday, 17 February 2011

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்:ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு

சென்னை: புதிய மாடல்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில்,ஐகான் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவனம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் முத்திரை பதித்த மாடல்களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது.கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனைகாலம் வந்தது.
இந்தநிலையில்,ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது.இதையடுத்து,பிகோ உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஐகான் கார் உற்பத்தியை ஃபோர்டு இந்தியா படிப்படியாக குறைத்தது.
பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்ட நகரங்களில் ஃபோர்டு ஐகான் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து,கடந்த 1ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் ஃபோர்டு ஐகான் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியாவின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மைக்கேல் போனிகாம் கூறியதாவது: "இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த மாடல் என்று ஐகானை கூறினால் அது மிகையாகாது.ஆனால்,புதிய மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஃபோர்டு ஐகான் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று.
மேலும்,சர்வதேச சந்தையை கருத்தில்கொண்டு 2015ம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதில்,சலூன் வடிவமைப்பை கொண்ட பியஸ்ட்டா கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
ஃபோர்டு ஐகான் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும்,வாடிக்கையாளர்கள் கவலைகொள்ள தேவையில்லை. ஐகானுக்கு தொடர்ந்து சர்வீஸ் வசதி,உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்கும்," என்று கூறினார்.

No comments:

Post a Comment