தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும், பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் இதே போன்று 31 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
அப்போது அக்கட்சி 18 இடங்களில் வென்றது. அதன் பிறகு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்ற தேர்தலில் அ இ அ தி மு க கூட்டணியில் அது இணைந்து போட்டியிட்டது.
ஆனால் தாம் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலுமே பாமக தோல்வியடைந்திருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லியில் பாமகவுடன் கூட்டு என்று கருணாநிதி அறிவிக்க, அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ராமதாஸ் கூற, கூட்டணி பற்றிய கேள்விகள் எழுந்தன.
திமுக கூட்டணியில் பாமகவைத் தவிர விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் உட்பட சில கட்சிகள் உள்ளன.
இதனிடையே பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment