
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் ஏற்றிச் சென்று, அங்கு நீரருந்த வரும் யானைகள் உள்ளிட்ட விலங்குளை காட்டுவர். இந்தப் படகுகளை கேரள மாநில சுற்றுலாத் துறை இயக்கிவருகிறது.
அப்படி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இன்று மதியம் கவிழ்ந்தது. இதில் இருந்த 76 சுற்றுலாப் பயணிகள் நீரில் முழ்கினர். தேக்கடியில் நடுப்பகுதியில் இது நடந்ததால் விபத்து விவரம் தெரிவதற்கே கால தாமதமாகியுள்ளது. விவரம் கிடைத்ததும் மீட்புப் பணிகள் துவங்கியது.
இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 38 உடல்கள் இரவு 8.00 மணி வரை மீட்கப்பட்டுள்ளன. நீரில் தத்தளித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரும் ஒருவர். இவர் தனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்ததாக கதறிக் கொண்டு கூறியுள்ளார்.
தற்பொழுது அப்பகுதியில் மழை பொழியத் துவங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாப் படகில் 50 பேர் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், ஆனால் விபத்திற்குள்ளான படகில் மிக அதிகமாக 76 பேர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அதனால்தான் படகு கவிழ்ந்தது என்றும் செய்திகள் கூறுகின்றன.
1 comment:
எல்லோரும் யானையை பார்ப்பதற்காக, ஒரே சைட் வந்ததினால் கவிழ்ந்து விட்டது எனக் கூறியுள்ளனர். எது சரி என்று தெரியவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும், இது பரிதாபமான சம்பவம்.
Post a Comment