Thursday, 17 September 2009

எம்.பி.பி.எஸ். கல்விக் கட்டணம் ரூ.250: ஜிப்மரில் தொடரும் பாரம்பரிய பெருமை

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 250 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
1964-லிருந்து இக் கட்டணத்தை ஜிப்மர் நிர்வாகம் மாற்றாமல் உள்ளது. மேலும் நூலகம், விளையாட்டு, வளர்ச்சி நிதி போன்ற வகையில் ரூ. 3,906 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஆயிரம் ரூபாய் மாணவர்கள் படிப்பை முடித்துச் செல்லும்போது திரும்ப வழங்கப்படுகிறது.
சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்கூட எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு மாதம் ரூ. 500 முதல் 1000 வரை வசூலிக்கப்படுகிறது. நன்கொடை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நம் நாட்டில் இப்படியொரு கல்வி நிறுவனம் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ஜிப்மரில் பணியாற்றும், நோய் தடுப்பு மற்றும் சமூகவியல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் பாலசுதர்சனன் கூறுகையில், ""ஜிப்மரில் நானும் ரூ.250 கொடுத்துதான் படித்தேன். இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களும் ரூ. 250தான் கொடுத்து படிக்கின்றனர்'' என்றார்.
நாட்டிலேயே புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையிலும் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவக் கல்லூரியிலும்தான் இந்த அளவுக்கு குறைவான படிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஜிப்மர் டீன் கே.எஸ். ரெட்டி கூறினார்.
""இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. தில்லியில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மத்திய அரசின் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியில் படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது'' என்றார்.
புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாறிவிட்டன. இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை. அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணயக் குழு மீதியுள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இக் கல்லூரிகளிலும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் ரூ. 1.5 லட்சம் முதல் 1.75 வரை வசூலிக்க கட்டண நிர்ணய குழு அனுமதி அளித்துள்ளது. அதைத் தவிர கூடுதல் கட்டணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரை வசூல் செய்து கொள்ளலாம்.
புதுச்சேரியில் மருத்துவக் கல்விக்காக அதிகம் வசூலிக்கும் கல்லூரியும் இருக்கிறது. குறைந்தக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரியும் இருக்கிறது. ஆனால் புதுச்சேரி அரசுக்கென்று இதுவரை சொந்த மருத்துவக் கல்லூரி கிடையாது. இதற்காக தொடங்கப்பட்ட கட்டடப் பணி பாதியில் நிற்கிறது.

No comments:

Post a Comment