Tuesday, 6 October 2009

சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

மதுரை, திண்டுக்கல் இடையே உள்ள ஊர் சோழவந்தான். இங்குள்ள ரயில் நிலையத்தில், இன்று மாலை 6.05 மணிக்கு ஈரோடு - நெல்லை ரயில் வந்து நின்றது.
வந்து நின்று சில நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. வெடித்த வேகத்தில் அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 ஆண்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ரயில் நிலையத்தின் மேற்கூரை நாலாபக்கமும் சிதறி நொறுங்கி விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்ததால் ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. ஈரோடு - நெல்லை ரயிலில் இருந்த பயணிகள், ரயிலிலிருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
குண்டுவெடிப்பில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்கள் மூலம் போலீஸார், மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரயில்வே நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததா அல்லது கிணறு தோண்ட அல்லது குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா என்று தெரியவில்லை.
காவல்துறை தரப்பில் கூறுகையில், என்ன மாதிரியான குண்டுவெடிப்பு என்று விசாரணைக்குப் பின்னர்தான் தெரிய வரும். இருப்பினும் தீவிரவாத செயலாக இது இருக்க வாய்ப்பில்லை என்றனர்.
குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர் வந்து நின்ற நெல்லை பாசஞ்சர் ரயிலில் குண்டுகள் ஏதேனும் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த ரயிலை நிலையத்திலிருந்து கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ரயில் வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சோழவந்தான் விரைந்துள்ளனர்.

No comments:

Post a Comment