Tuesday, 28 July 2009

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராஜிநாமா

ஜூலை 28: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.
சோபியான் படுகொலைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று பெரும் அமளி நிலவியது.
இன்று வேறொரு விவகாரத்தால் அவை கொந்தளித்தது. இளம் பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சரணைடந்த பயங்கரவாதிகளிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இன்று அவை தொடங்கியதும் இந்தப் பாலியல் மோசடி விவகாரத்தில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் துணை முதல்வரும் பிடிபி மூத்த தலைவருமான முஸாபர் பெய்க் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, கடும் உணர்ச்சிவசப்பட்டவரான உமர், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தம்மால் சகித்துக் கொள்ள முடியாது எனவும் தம்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்வரை தம்மைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.இதை ஏற்காத எதிர்கட்சியினர், இந்த வழக்கில் 102-வது குற்றவாளியாக உமர் பெயர் இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, ராஜிநாமா செய்யப் போவதாக உமர் தெரிவித்தார்.
தம்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது எனக்குத் தெரியும். எனினும், தாம் நிரபராதி என நிரூபிக்கும்வரை தாம் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றார் அவர்.இவ்வாறு உமர் பேசியதும், அவை கொந்தளித்தது. கடும் அமளி ஏற்பட்டது. எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் உமரை சமாதானம் செய்ய முயன்றனர். அவரது ராஜிநாமாவை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறினர். இதை ஏற்காத உமர் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

Monday, 27 July 2009

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

ஜூலை 27- ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்பட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் தான் பணியாற்றும் ""ஏபிசி டி.வி."" என்னும் தொலைக்காட்சிக்கு செய்தி அளித்திருந்தார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் 2 ஏஜென்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை அணுகினார். இதில், 3000 அமெரிக்க டாலர்கள் முதல் 5000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினால் அத்தகைய சான்றிதழ்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புலனாய்வுச் செய்தி ஏபிசி டி.வி.,யில் அண்மையில் வெளியானது.
இதையடுத்து அந்த பெண் செய்தியாளரை சிலர் மிரட்டியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஜூலை 26: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். "ஐஎன்எஸ் அரிஹந்த்' என்ற இக்கப்பல், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது. கார்கில் வெற்றியின் 10-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், தனது மனைவியுடன் தனி ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் வந்தார். பிரதமரின் மனைவி குர்ஷரண் கெüர், தேங்காய் உடைத்து கப்பலை முறைப்படி தொடக்கிவைத்தார்.
6 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 110 மீட்டர், அகலம் 11 மீட்டர். இதற்கான செலவு ரூ.30 ஆயிரம் கோடி. இக்கப்பலை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆனது. ரஷியாவின் சார்லி அணுசக்தி கப்பலைப் போன்று தோற்றமுடைய ஐஎன்எஸ் அரிஹந்த், முதல் இரண்டு ஆண்டுகள் கடலில் முன்னோட்டம் பார்க்கப்படும். பின்னர் முழுவதுமாக பணியில் ஈடுபடுத்தப்படும்.
இக்கப்பலில் 12 கே-15 வகை ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடைகொண்டது. சுமார் 750 கி.மீ. தூரம் இலக்கை தாக்கவல்லது. இக்கப்பலில் கடற்படை வீரர்கள் 95 பேர் உள்ளனர்.
விழாவில் பங்கேற்று பிரதமர் பேசியதாவது: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சாதனையாகும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்கும் உலக நாடுகளுடன் (அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா) நாமும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெருமையளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday, 23 July 2009

விடுதலைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியமனம்

ஜூலை 21: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக செல்வராஜா பத்மநாதன் என்ற குமாரன் பத்மநாதன், செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
"கே.பி.' என்று அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவது மற்றும் ஆயுங்களை கொள்முதல் செய்து தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இவர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை.


Tuesday, 21 July 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்

Movie - Achchamundu Achchamundu
Director - Arun Vaidyanathan
Music - Karthik Raja
Cast - Prasanna, Sneha, John Shea
Rate -
இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகம் நடைபெறுகின்றன என்பதை சொல்ல வந்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தமிழ்படம்!
கதைப்படி, அமெரிக்கா - நியூஜெர்சி புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ்குடும்பம் பிரசன்னா- சினேகாவினுடையது. தங்களது செல்லமகள் அக்ஷயாதினேஷுடன் வசிக்கும் அவர்கள் வீட்டிற்குள் பெயிண்டர் ரூபத்தில் அடியெடுத்து வைக்கிறான் குழந்தை பாலியல் கொடூரம் புரியும் அமெரிக்கன்- வில்லன் ஜான்ஷே! அமெரிக்கன், இந்தியன், தமிழன் என்ற பாகுபாடில்லாமல் பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளும் ஜான்ஷே, பிரசன்னாவின் பெண் குழந்தை அக்ஷயாவையும் அடையத்துடிக்கிறான். அவனது ஆசை வென்றதா? அல்லது அவனை பிரசன்னா கொன்றாரா? என்பது மீதிக்கதை!
மேக்கப்பும், மீசையும் இல்லாமல் பிரசன்னா அமெரிக்காவாழ் தமிழராகவே அசத்தியிருக்கிறார். குழந்தை மீதான பாசத்திலும் சரி, மனைவி சினேகா மீதான காதலிலும் சரி நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். வில்லனுடன் மோதி குழந்தையை காப்பாற்றும் காட்சிகளில் கூட பிரசன்னா புதிய பரிமாணம் காட்டி பிரமிப்பூட்டுகிறார். கீப் இட் அப்! சினேகாவும் பிரமாதம்!
பிரசன்னா - சினேகா இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அமெரிக்க வில்லன் ஜான்ஷே என்றால் மிகையல்ல. குழந்தைகள் மீது அப்படி ஒரு விரகதாபம் கொள்வதாக நடிக்க ஜான் ஷாவால் மட்டுமே முடியும்! என சொல்ல வைத்து விடுகிறார் இந்த ஹாலிவுட் நடிகர். குழந்தை நட்சத்திரம் அக்ஷயாதினேஷûம் பிறற அமெரிக்கா வாழ் இந்தியர்களும்கூட பேஷ் பேஷ் சொல்ல வைத்து விடுகின்றனர்.
கிரிஸ் ப்ரெய்லிச்சின் "ரெட் ஒன்' காமிரா ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திற்கு பலம் என்றாலும் முழுக்க முழுக்க அமெரிக்க பின்னணி சற்றே பலவீனம். அதுவும் இந்தியாவில் குழந்தை பாலியல் கொடூரங்கள், குற்றங்கள் ஜாஸ்தி எனக் க்ளைமாக்ஸில் கூற முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படம் எடுத்திருப்பது "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை அந்நியப் படுத்துகிறதென்றால் மிகையல்ல!
அருண் வைத்யநாதனின் எழுத்தும் இயக்கமும் ஒரு "ஏ' கிளாஸ் பிரச்னையை பி.சி. சென்டருக்கும் புரிய வைக்க முயற்சித்துள்ளன என்றால் மிகையல்ல! ஆனால், அதற்கான களம் அமெரிக்காவாக இருப்பது சில இடங்களில் பலம்! பல இடங்களில் பலவீனம்!! மொத்தத்தில் "அச்சமுண்டு அச்சமுண்டு' உலகத்தில் மனிதர்கள் "இப்படியும் உண்டு! என குழந்தை பாலியல் கொடூரர்களை அடையாளப்படுத்தி அறை கூவல் விடுத்துள்ளது!