Monday 27 July, 2009

முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஜூலை 26: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். "ஐஎன்எஸ் அரிஹந்த்' என்ற இக்கப்பல், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது. கார்கில் வெற்றியின் 10-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், தனது மனைவியுடன் தனி ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் வந்தார். பிரதமரின் மனைவி குர்ஷரண் கெüர், தேங்காய் உடைத்து கப்பலை முறைப்படி தொடக்கிவைத்தார்.
6 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 110 மீட்டர், அகலம் 11 மீட்டர். இதற்கான செலவு ரூ.30 ஆயிரம் கோடி. இக்கப்பலை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆனது. ரஷியாவின் சார்லி அணுசக்தி கப்பலைப் போன்று தோற்றமுடைய ஐஎன்எஸ் அரிஹந்த், முதல் இரண்டு ஆண்டுகள் கடலில் முன்னோட்டம் பார்க்கப்படும். பின்னர் முழுவதுமாக பணியில் ஈடுபடுத்தப்படும்.
இக்கப்பலில் 12 கே-15 வகை ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடைகொண்டது. சுமார் 750 கி.மீ. தூரம் இலக்கை தாக்கவல்லது. இக்கப்பலில் கடற்படை வீரர்கள் 95 பேர் உள்ளனர்.
விழாவில் பங்கேற்று பிரதமர் பேசியதாவது: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சாதனையாகும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்கும் உலக நாடுகளுடன் (அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா) நாமும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெருமையளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment