Tuesday, 1 December, 2009

இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம்.

தேகப்பயிற்சி செய்யும் மாணவர் புத்திக்கூர்மை அடைகிறார்கள்..
ஆட்டுக்கொத்து சாப்பிடும் தமிழருக்கு வருகிறது ஆபத்து..
இன்றைய டேனிஸ் பத்திரிகைகளில் இரண்டு செய்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதில் முதலாவது இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் 30 வீதம் அதிகமாக உள்ளது என்பதாகும். உலகப்புற்றுநோய் ஆய்வுக்கழகமான ( டபிள்யூ.சி.ஆர்.எப் ) ஐ மேற்கோள்காட்டி முதலாவது செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தினரால் பேராசிரியர் ஜோர்ஜ் குன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வின் பிரகாரம் தேகப்பயிற்சியை சிறந்த முறையில் செய்யும் 15 – 18 வயதுள்ள மாணவர்கள் நுண்ணறிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளோடு, கடந்த மூன்று மாதங்களாக வெளிவரும் மருத்துவ ஆய்வு அறிக்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் உணவில் சரியான ஒழுங்கமைப்பையும், அத்தோடு தேகப்பயிற்சியையும் சரியாக நெறிப்படுத்தினால் கண்டிப்பாக ஆரோக்கிய வாழ்வை அடையலாம் என்பதே இன்றைய ஐரோப்பாவின் முக்கிய குரலாக ஒலிப்பது தெரியவருகிறது.
உலகப் புற்றுநோய் ஆய்வுக்கழகமும், அமெரிக்கா புற்றுநோய் ஆய்வுக்கழகமும் சென்ற மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இறைச்சியை அதிகமாக உண்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 வீதம் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளன. வாராந்தம் 1.100 கிராம் இறைச்சி சாப்பிடுவோரையும் அதேபோல வாரம் 150 கிராமிற்குக் குறைவாக இறைச்சி சாப்பிடுவோரையும் ஒப்பிட்டால் 1100 கிராம் சாப்பிடுவோருக்கு 30 வீதம் அதிக ஆபத்து என்றும் தெரிவிக்கின்றன. இறைச்சியால் பெருங்குடல், சிறுகுடல் இரண்டும் தாங்கமுடியாத களைப்படைந்து புற்று நோய்க்குள் விழுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகமாக இறைச்சியை விரும்பி உண்போர் வாழும் முதலாவது நாடாக டென்மார்க் இருக்கிறது. மேலும் வருடாந்தம் 4000 டேனிஸ்காரர் பெருங்குடல் புற்றுநோய்க்கு உள்ளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் டேனிஸ் ஆரோக்கிய வாழ்விற்கான உணவு வரையறைப் பிரிவினர் வாரந்தம் சாப்பிட வேண்டிய இறைச்சியின் அளவு எத்தனை கிராம் என்பதை இன்றுவரை துல்லியமாக வரையறை செய்யவில்லை. எனினும் வாராந்தம் 500 கிராம் இறைச்சிக்கு மேல் வேண்டாம் என்பதே பொதுவான ஆலோசனையாக உள்ளது. இறைச்சியில் இரண்டுகால் பறவைகள், காலில்லாத மீன் இவைகளின் ஊன் (சதை) நாலுகால் விலங்குகளின் இறைச்சிகளோடு ஒப்பிட்டால் சிறந்தது.

இறைச்சி உணவு என்றதும் நேரடியான இறைச்சி மட்டுமல்ல லிவர்பூஸ்ரேக் எனப்படும் ஈரல்பசை, பூல்சர், பேர்கர் என்று சகலவகை இறைச்சி உப உணவுகளும் இதற்குள் அடங்கும். அதேவேளை பெருங்குடல் மட்டுமல்ல உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும் புற்று நோய்களுக்கு இவை காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை இப்படியான ஆய்வுச் செய்திகள் இறைச்சி விற்பனைத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இறைச்சி உண்போருக்கு விரக்தியையும் உண்டு பண்ணும். ஆகவே இரு தரப்பிலும் ஓர் அமைதியை ஏற்படுத்துமுகமாக டேனிஸ் விசேட வைத்திய நிபுணர் அனா ரியோனலான்ட் இன்னொரு கருத்தையும் முன்வைத்துள்ளார். பெருங்குடல் புற்றுநோய்க்கு இறைச்சி ஒன்றுதான் காரணமாக இருப்பதாகக் கூற முடியாது என்பது அவரது ஆறுதல் செய்தியாகும்.
அடுத்து சுவீடன் ஆய்வைப் பொறுத்தவரை கடந்த 1964 முதல் 1994 வரை கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்ட 1.2 மில்லியன் சுவீடிஸ் இளையோரின் நுண்ணறிவுத்திறனை மதிப்பீடு செய்து அறிக்கையைப் பார்த்தல் வேண்டும். இக்காலப்பகுதியில் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டு கடும் தேகப்பயிற்சிகள் வழங்கப்பட்ட இளையோரில் பெரும்பான்மை சிறந்த நுண்ணறிவுடையோராக மிளிர்வதாக தெரிவிக்கிறது. எனவே இளவயதில் தேகப்பயிற்சி நோயற்ற வாழ்வுக்கு மட்டுமல்ல நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கிறது. பெற்றோர் 15 – 18 வயதுக்கிடைப்பட்ட மாணவரை பிரத்தியேக வகுப்பிற்கு அனுப்பி அறிவாளியாக்க முயல்வது மட்டும் போதியதல்ல, அதுபோல தேகப்பயிற்சிக்கும் அனுப்புவது அவசியமானது என்ற கருத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
நிறையப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஆடு பிடித்து இறைச்சியடித்து வாரத்தில் பல தடவைகள் சமைக்கும் பழக்கம் உடையோராக இருக்கிறார்கள். ஆட்டுக் கொத்துறொட்டி அடிக்கடி கடைகளில் சாப்பிட எண்ணுகிறார்கள். அதுபோல பிள்ளைகளுக்கு மக்டொனால்ஸ் உணவில் ஆர்வத்தையும் பல பெற்றோர் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயத்தை இந்த இரண்டு ஆய்வுகளும் தருகின்றன.

No comments:

Post a Comment