Saturday, 19 December 2009

தோனிக்கு இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பந்துவீசிக் கொண்டிருந்த இந்திய அணியினர் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால், ஆட்டம் முடிவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து ஐசிசி விதிப்படி நடுவர் ஜெஃப் க்ரோ தோனிக்கு இரு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.
எனினும், இந்தத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறதா என்பது பற்றித் தெரியவில்லை. உடனடியாகத் தடை அமலுக்கு வரும்பட்சத்தில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் கேப்டனாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. எனினும் தோனி இல்லாமல் போனால், அடுத்து இலங்கையுடன் ஆட வேண்டிய ஆட்டங்களில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இலங்கையுடனான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment