Monday, 14 December 2009

மக்கள் விரும்பினால் மாநிலங்களைப் பிரிக்கலாம்: அப்துல்கலாம்


இந்தூர்: மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சி அடைய முடியும். எனவே தனி மாநிலம் குறித்து அந்தந்த மாநில மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்வது நல்லது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து தெரிவித்தார்.
மாநிலங்களைப் பிரிப்பதைக் காட்டிலும் மக்களின் விருப்பமே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அப்துல் கலாமிடம் தனி மாநில கோரிக்கைகள் பரவலாக அதிகரித்து வருவது குறித்து கேட்டபோது அவர் பதில் அளிக்கையில்,
'இந்த மாநிலத்தை பிரிக்கலாம், இதை பிரிக்கக் கூடாது என்று சொல்வது மிகவும் சிரமம். என்னை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களின் கருத்து, விருப்பம் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவர்களின் விருப்பப்படியே செய்யவும் வேண்டும்.
ஏனெனில் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் வரை நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாத ஒன்று. தனித்தனி மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருவது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரண மக்களுக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்றால், இதை வளர்ச்சிக்கான அரசியலாக பார்க்கவேண்டுமே தவிர, அரசியலின் அரசியலாக அணுகக்கூடாது.
தற்போது நாட்டில் இளம் தலைவர்கள் நிறைய வருவது நல்லது. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் வளர்ச்சியை நோக்கி வீறுகொண்டு எழவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதமாக்கி அடுத்த 10 ஆண்டுகளிலும் அதை தக்க வைத்துக்கொண்டால், 2020 வல்லரசு என்ற இலக்கை எட்டிவிட முடியும்' என்று கலாம் கூறினார்.

No comments:

Post a Comment