Thursday 9 July, 2009

கிரிக்கெட் நிர்வாகியாகிறார் கங்குலி

மும்பை, ஜூலை 8: விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்தார்.
புதன்கிழமை தனது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கங்குலி கூறியதாவது: சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டேன். ஆனால், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பேன்.

மேற்கு வங்கத்தில் ஏராளமான திறமை உள்ளது. அது குறித்து கவனம் செலுத்த விரும்புகிறேன். பிசிசிஐ பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஒரு நேரத்தில் ஓரடி மட்டுமே எடுத்து வைக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
டால்மியாவுக்கு எதிராக...: பெங்கால் கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தற்போதைய தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கு எதிராக கங்குலியை நிறுத்த டால்மியாவின் எதிரணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ தலைவராக...: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவி 2014-ல் கிழக்கு மண்டலத்துக்கு என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் கங்குலி முயற்சி செய்யக் கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ தலைவராக ஆக வேண்டும் எனில், வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் குறைந்தது 2 முறையாவது கங்குலி கலந்து கொண்டிருக்க வேண்டும்.
டால்மியா கருத்து: "பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடப் போவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சர்ச்சையை உருவாக்கவே இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன' என டால்மியா தெரிவித்தார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனான கங்குலி 113 டெஸ்டுகளில் 7,212 ரன்களும் (சராசரி 42.17 ரன்), 311 ஒருதின ஆட்டங்களில் 11,363 ரன்களும் (சராசரி 41.02) குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment