Tuesday, 23 June 2009

இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்: நடிகர் விஜய்

சென்னை, ஜூன் 22: இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்; ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தனது 35-வது பிறந்த நாளை சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமம், ரெங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள அவருடைய திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும் மெர்சி ஹோம் இல்லத்திலும் மதிய உணவு வழங்கினார். இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் விஜய் பேசியதாவது:
என் பிறந்த நாளை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அன்றைய தினம் என்னுடைய ரசிகர்கள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு, நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உதவிகளைச் செய்துள்ளனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். என்னுடைய ரசிகர் மன்றங்களை இப்போது மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ரசிகர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
அந்தக் கருத்தை நான் ஒதுக்கவில்லை. மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். மக்கள் பிரச்னைக்காக ரசிகர்களுடன் இணைந்து போராடுவேன்.
தற்போது நான் நடித்து வரும் "வேட்டைக்காரன்' படம், 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. என்னுடைய 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் ராஜா, செல்வபாரதி, ரமணா, கோபி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, மோகன் நடராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் ஏராளமான ரசிகர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். (Dinamani).

No comments:

Post a Comment