
Movie - Thoranai
Director - Saba Iyappan
Producer - GK Film Corporation
Music - Mani Sharma
Cast - Vishal, Shriya, Prakash Raj, Kishore
Rate -


கிழங்குன்னா அவிக்கணும், கீரைன்னா மசிக்கணும், விஷால்னா உதைக்கணும்! நல்லவேளையா இதிலே உதைக்கறதை இரண்டாவது பாதியிலே வச்சுட்டு, முதல் பாதி முழுக்க நல்லபடியா கதைக்கிறாங்க.
சின்ன வயசிலே ஊரை விட்டு ஓடிப்போன அண்ணனை கண்டுபிடிக்க சென்னைக்கு வர்றாரு தம்பி விஷால். அதெப்படி கரெக்டா சென்னைக்கு வர்றாருன்னு கேள்வி கேக்கிறவங்க நிச்சயமா மசாலா பிரியருங்களா இருக்க முடியாது. (இந்த படம் 'மசால்' தோசை பிரியர்களுக்கு மட்டும்) வந்த இடத்திலே ஸ்ரேயாவை காதலிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் அண்ணனை தேடி அலைய, ஒருவழியாக கிடைக்கிறார் அண்ணன். ஆனால், சென்னையையே கலக்கும் ரவுடியாக! அவரை இன்னொரு ரவுடியிடமிருந்து காப்பாற்றி கொண்டு போகிற பெரும் பொறுப்பு தம்பிக்கு வாய்க்க, சவால் மேல் சவால்களை வீசி, சகட்டு மேனிக்கு துப்பாக்கிகள் பிரயோகித்து இறுதி யுத்தத்தில் ஜெயிக்கிறார் விஷால்.
விவேக், வடிவேலுகள் கொடுக்காத கலகலப்பை விஷால் கட்சிக்கு கொடுத்து, நகைச்சுவை கூட்டணியை பலப்படுத்தியிருக்கிறார் சந்தானம். விஷாலை காப்பாற்ற தனது உடம்பிற்குள் பரவை முனியம்மாவின் திருவாளர் ஆவி வந்திருப்பதாக சொல்லப்போக, சந்தானத்தை விரட்டி விரட்டி வெட்கப்படும் முனியம்மா எபிசோட் குலுக்கி போடுகிறது மொத்த தியேட்டரையும். அதுவும் விஷால் பரவை முனியம்மாவுக்கு 'லிப் கிஸ்' அடிக்கிற காட்சி வெடிச்சிரிப்பு. இவர்களுடன் வாட்ச்மேன் மயில்சாமியும் சேர்ந்து கொள்ள, இப்படி சிரிச்சு எம்புட்டு நாளாச்சுன்னு சந்தோஷப்பட வைக்கிறார்கள் அத்தனை பேரும்.
'இன்டர்வெல் கேப்' முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் பெரிய தலைமுறை இடைவெளியையே ஏற்படுத்தி வைக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சுறுசுறு, கடுகடு கோபத்தோடு நகர்கிறது படம். பிரகாஷ்ராஜும், கிஷோரும் ஒரு இராணுவத்திற்கே தேவைப்படுகிற அளவு துப்பாக்கி ரவைகளை பிரயோகிக்கிறார்கள். மந்திரம் போட்டது போல அந்தரத்தில் பறக்கிறார்கள். சண்டை பிரியர்கள் கைதட்டினாலும், சம்சாரிகளோடு தியேட்டருக்கு வந்தவர்கள் பாடுதான் துவம்சம்!
விஷால் ஸ்கிரீன் ஓரமாக அடிக்கடி வந்து நின்று யாருக்கோ சவால் விடுகிறார். தனது ஃபார்முலாவை விஜயே மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, இவர் அப்படியே விஜயை ஃபாலோ செய்வது யார் திருப்திக்காகவோ? ஆனாலும் விஷால் படத்திற்கேயுரிய மெனக்கெடல்கள் திருப்தி.
பனித்துளியாக இருந்த ஸ்ரேயா, கொஞ்சம் ட்ரை ஆகி பச்சை தண்ணீராகியிருக்கிறார். அடுத்த ஸ்டேஜூக்கு போவதற்குள் விழித்துக் கொள்வது நல்லது. (ஸ்ரேயாவுக்கு சதை பிடிக்காததும், விஷாலுக்கு கதை அமையாததும் சகஜம்தானேப்பா...! வேறென்னுமில்லே, பெரிய கருப்ப தேவரு நம்மள ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாரு)
பாண்டியராஜன், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், லால் என்று பலர் வந்து போனாலும், லால் 'லாக்' பண்ணுகிறார் நம்மை! மிரட்டும் ஒளிப்பதிவு ப்ரியனுடையது. மணி சர்மாவின் இசையில் சில பாடல்கள் துள்ளாட்டம். சில பாடல்கள் தள்ளாட்டம்.
ஆத்ம விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை விஷாலுக்கு உணர்த்தியிருக்கிறது தோரணை!
No comments:
Post a Comment