Monday, 29 June 2009

ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் அறிமுகம்

ஜூன் 28: உலக அளவில் பிரபலமாகியுள்ள ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய மோட்டார் கார் நிறுவனங்களை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதற்குப் பிறகு அவ்விரு நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த கார்கள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியச் சந்தைக்கு இவ்விரு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாக விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி காந்த், ஜாகுவார் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக் ஓ டிரிஸ்கால், லேண்ட் ரோவர் நிர்வாக இயக்குநர் பில் பாபம், ஜாகுவார்-லேண்ட் ரோவர் கூட்டு நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றனர். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். ரூ.92 லட்சம் விலை: ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.92 லட்சம் என்று இரு மாடல்களில் விற்கப்படும். அவை எக்ஸ்-எஃப், எக்ஸ்-கே-ஆர் ரகங்களாகும். லேண்ட் ரோவர் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.89 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கும். இவை டிஸ்கவர், ரேஞ்ச் ரோவர் என்ற இரு மாடல்களாகும். ஜாகுவார் என்ற மோட்டார் கார் நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் மூன்றாவது நபரை அமரவைத்து உடன் அழைத்துச் செல்லும் பக்கவாட்டு கார் பகுதியைத் தயாரிப்பதில் புகழ் வாய்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் தயாரிப்பில் ஈடுபட்டதால் டாடா குழுமத்துக்கு 2008-2009-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2,505.25 கோடி இழப்பு ஏற்பட்டது. சர்வதேசச் சந்தையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது. அப்படியும் டாடா குழுமம் மனம் தளராமல் தான் புதிதாக வாங்கிய இரு மோட்டார் கார் நிறுவனங்களின் உற்பத்தியை முடக்காமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், அதன் தயாரிப்புகளை விற்க முற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். மும்பையில் இவ்விரு நிறுவனங்களின் மோட்டார் கார் வாகனங்களுக்கு உள்ள தேவையைப் பொருத்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவற்றின் விற்பனையை விரிவுபடுத்துவோம் என்றார் மைக் ஓ டிரிஸ்கால்.
இந்தக் கார்கள் மிகவும் விலை அதிகமானவை. மிகப்பெரிய பணக்காரர்களால்தான் வாங்க முடியும் என்பதால் இவற்றை விற்க இலக்கு எதையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை, இந்தியச் சாலைகளில் இந்தக் கார்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்றார் பில் பாபம்.
இந்தக் கார்களின் தொழில்நுட்பமும் திறனும் இந்திய வாகன ஓட்டிகளுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். நவீனத் தொழில்நுட்பங்களிலான கார் என்றால் எப்படி இருக்கும் என்று ஏராளமான இந்தியர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்றார் ரத்தன் டாடா.
இந்தியாவில் எங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளை விற்பதற்கு ஒரு தளம் வேண்டும் என்று முன்னர் தேடிப் பார்த்தோம், இப்போது அந்த வாய்ப்பு நன்றாகக் கிடைத்திருக்கிறது என்றார் டேவிட் ஸ்மித். ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்கள் பிரேசில், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் நன்றாக விற்க ஆரம்பித்துள்ளது, எனவே இந்தியாவிலும் விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் டேவிட் ஸ்மித். (Dinamani)

No comments:

Post a Comment