Sunday, 28 June 2009

தேசிய அடையாள அட்டை திட்டம்: தலைவர் நந்தன் நிலகேணி

புது தில்லி, ஜூன் 25: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையின் தலைவராக இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனி ஆணையம் ஒன்று உருவாக்கப்படுகிறது. திட்டக் குழு தலைமையில் இந்த ஆணையம் செயல்படும்.
அரசு செயல்படுத்தும் பிரபலமான திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைகிறதா என்பதை இந்த ஆணையம் ஆராயும். இந்த ஆணையம் நலத் திட்டங்கள் செயல்படுவதை கண்காணிப்பதோடு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தையும் படிப்படியாகச் செயல்படுத்தும்.
அரசு செயல்படுத்தும் முக்கியத் திட்டங்களான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ -அனைவருக்கும் கல்வித் திட்டம்), தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், பாரத் நிர்மான் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதன் பலன் உரியவர்களைச் சேர்கிறதா என்பதையும் இக்குழு ஆய்வு செய்யும்.

No comments:

Post a Comment