Sunday 14 June 2009

Movie review - Mayandi Kudumbathar

Director- Rasumadhuravan
Music - Sabesh Murali
Cast - Tharun Gopi, Manivannan, Rajkapoor, G M Kumar, Ponvannan, Seeman, Singam Puli
Rate -

நெஞ்சை நக்குற பாசக்கார பயலுக ஒரு பக்கம், நஞ்ச கக்குற நாசக்கார பயலுக மறுபக்கம். வேறொன்னுமில்லே, பங்காளி பிரச்சனை. இன்னொரு பக்கம் கடைக்குட்டி பயலோட கஷ்டம். இரண்டு பிரச்சனையையும் ஒரு வண்டியிலே பூட்டி, 'சவாரி' அடிச்சிருக்காரு ராசு மதுரவன். இதெல்லாம் பீம்சிங் ஸ்டைலுன்னு கொண்டாடுது ஒரு குரூப். உலகம் போற வேகத்திலே இப்படி ஒரு படமான்னு கோவப்படுது இன்னொரு குரூப். சட்டையிலே அழுக்கு படாத சர்தாருங்களை விடுங்க. மண்ணு மணக்கிற கதையை நேசிக்கிற நம்ம மாதிரி ஆளுங்களுக்கு மாயாண்டி, நிச்சயமா பூச்சாண்டி இல்லே!
மணிவண்ணனும், ஜிஎம் குமாரும் அண்ணன் தம்பிங்க. இரண்டு குடும்பத்துக்கும் தலா நாலு பசங்க. மணிவண்ணன் குடும்பத்திலே எல்லாரும் நல்லவங்க. குமார் குடும்பத்திலே அத்தனை பேரும் கெட்டவங்க. படம் முழுக்க உறுமிக்கிறாய்ங்க. மணிவண்ணனின் கடைக்குட்டி தருண்கோபிக்கும் பக்கத்து ஊரு பூங்கொடிக்கும் காதல். திடீர்னு மணிவண்ணன் போய் சேர்ந்துவிட, தனி மரமா நிக்கிறாரு தருண்கோபி. அதுவரைக்கும் கூட்டுக்குடும்பமா இருந்தவங்க தனித்தனியா பிரிய, சாப்பாட்டுக்கே பிரச்சனை தருண்கோபிக்கு. இவரு சோகம் இப்படின்னா, காதலும் கண்ணாமூச்சு காட்டுது பிரதருக்கு. தருண்கோபி என்னானார்? பெரியப்பா குமார் குடும்பம் திருந்திச்சா? இதுதான் க்ளைமாக்ஸ்.
அடிக்கடி வரும் திருவிழா காட்சிகளும், அடிதடி காட்சிகளும் அலுப்பை தந்தாலும், அண்ணன் தம்பி பாசம் அல்ட்டிமேட்! குறிப்பா 'முத்துக்கு முத்தாக' பாடலை ஒலிக்க விடும்போதெல்லாம் முத்து முத்தா கொட்டுது நம்ம கண்ணிலேயிருந்து.
தருண்கோபிக்கு ந(டி)ப்பாசை! ஆனாலும் கொடுத்த வேடத்தை கனக்கச்சிதமாக கையாண்டிருக்கிறார். ப்ளஸ் டூ வேஷம் பொருந்தலே என்றாலும், பூங்கொடியை இழந்து தவிக்கிற காட்சிகளிலும், அக்கா வீட்டு விசேஷத்துக்கு போய் அவமானப்பட்டு திரும்பி வரும்போதும் கண்கலங்க வைக்கிறார். என்னதான் காதலிக்கு கல்யாணம் ஆயிருச்சு என்றாலும் நட்ட நடுரோட்டில், மட்ட மல்லாக்க விழுந்து புரளுவதெல்லாம் டூ மச் வாத்தியாரே!
பிரதர்ஸ் குரூப்பில் மனசிலே ஆணி அறைஞ்சுட்டு போறது ரெண்டே ரெண்டு பேரு. சீமானும், ஜெகன்நாத்தும். அதிலும் சீமான் கலப்படமில்லாத கருப்பு எம்.ஜி.ஆராகி இருக்கிறார். மனைவிக்கு தெரியாமல் தம்பிக்கு பண உதவி செய்யும் போது அவர் பேசுகிற டயலாக், ஓராயிரம் அண்ணன்களின் உள்ளக் குமுறல். "கள்ளக் காதலையே நாலு பேருக்கு தெரிஞ்சு பண்ணிடுறாங்க. உறவுகளுக்கு உதவுற விஷயத்தை மறைச்சு மறைச்சு செய்ய வேண்டியிருக்கு" எத்தனை சத்தியமான வார்த்தைகள்?அதுவும் இவரு பாடுற அந்த பாடல், இந்த நு£ற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவ பாடலாக அமையும்.
எதிர்கோஷ்டி பிரதர்சில் சிங்கம்புலிக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் போடலாம். "அப்பா நீ செத்தா இது எனக்குதானே"ன்னு அவரு கேட்கும்போதெல்லாம் தியேட்டர் துவம்சம். "அவனுக்கு பொண்ண குடுத்திராதே, ராத்திரியிலே இழுத்துட்டு போயி..."ன்னு அவரு பேசும் பச்சை, அப்படியே பச்சை மண்ணுங்கறதை காட்டுது.
சட்டையை தோளில் போட்டுக்கொண்டே அலப்பறை பண்ணும் மயில்சாமி கடைசி வரைக்கும் பயங்கர ஸ்டடி!
அண்ணி, அக்கா என்று டைரக்டர் தேர்ந்தெடுத்த முகங்களில் வழிய வழிய யதார்த்தம். சில காட்சிகளில் நடிப்பென்றே தெரியாதளவுக்கு வழிந்தோடுகிறது இயல்பு. பலே!
பின்னணி இசையாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும், சபேஷ் முரளி 'சபாஷ்' போட வைக்கிறார்கள். பாடல் காட்சி வராதா என்ற ஏக்கத்தை தருகிறது அத்தனை பாடல்களும். காதல் காட்சிகளில் குழைந்து, சண்டை காட்சிகளில் அதிர்ந்து, பாடல் காட்சிகளில் பரவசமடைந்து, தானும் ஒரு கேரக்டராகவே மாறியிருக்கிறது பால பரணியின் கேமிரா.
வாழ்க்கையை சொல்கிற படங்களை வரவேற்கணும். அந்த வரிசையிலே பார்த்தா, இந்த 'மாயாண்டி குடும்பம்' ஒரு நாலு வாரத்துக்காவது ரசிகர்களோட குடும்பமா இருக்கணும். தயவு செய்து தியேட்டருக்கு போங்கய்யா...!
-ஆர்.எஸ்.அந்தணன் Tamilcinema.com

No comments:

Post a Comment