Monday, 8 June 2009

Eelam struggle will continue - Seeman


பெங்களூர், ஜூன் 7: தமிழீழ விடுதலைப் போராட்டம் இனிமேல்தான் தீவிரமடையும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்த அந்நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்ட பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெங்களூர் கிழக்கு ரயில்நிலையம் அருகே மைதானத்தில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் (க.த.ம.இ.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:
புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் என்று கூறி சுமார் 25,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.
இதுபோல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது.
போரில் வென்றுவிட்டோம்; புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால், இனிமேல்தான் தமிழீழப் போராட்டம் தீவிரமடைப்போகிறது.
போரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால், ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக் கோரிக்கை பறிக்க முடியாது. இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாகக்கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
குடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால், தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத் தமிழர்களிடத்தில் உள்ள தமிழ் உணர்வுகூட தமிழக தலைவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம்.
முன்னதாக க.த.ம.இ. தலைவர் சி.ராசன் தலைமையேற்று உரையாற்றுகையில், "தமிழக கட்சித் தலைவர்களும், தமிழர்களும் சரியான அணுகுமுறையுடன் போராடியிருந்தால் இலங்கையில் என்றைக்கோ தமிழீழம் மர்ந்திருக்கும்' என்றார்.
மனித சங்கிலி பேரணியில் பெரியார் திராவிடர் கழகத்தினர், பெங்களூர் மக்கள் நலச்சங்க செந்தில்குமார், விடியல் நூலக அமைப்பினர், கன்னட-தமிழர் ஒற்றுமை கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment