ஆக.15- அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகர் ஷாருக் கானிடம் விமான நிலையத்தில் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அங்கு ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு நடிகர் ஷாருக் கானை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். இதையடுத்து அமெரிக்கா சென்ற அவர் நேற்றிரவு நியூஜெர்சியில் அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை நெவார்க் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாருக், ""என்னை அடுத்தகட்ட விசாரணைக்காக விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டாம் நிலை விசாரணைக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். என்னிடம் தொலைபேசி எண்கள், ஓட்டல் அறை எண் போன்ற மிகச் சாதாரண கேள்விகளையும் கேட்டார்கள். இது எனக்கு கூச்சமாகவும் வருத்தமளிப்பதாகவும் இருந்தது. எனது பாதுகாவலர்களுக்கு விசா வழங்கப்படாத நிலையில் தனியாக வந்த என்னிடம் விசாரணை நடத்தியபோது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். எனினும், எனது குடும்பத்தினர் என்னுடன் வராமல் இருந்தது சற்று ஆறுதலானது. அமெரிக்காவுக்கு வருவதற்கு எனக்கு எப்போதும் தயக்கமாக இருக்கிறது'' என்று கூறினார்.
தான் ஒரு இந்திய நடிகர் என்று ஷாருக் கூறியதை அமெரிக்க அதிகாரிகள் பொருட்படுத்தாமல் விதிமுறைகளை பின்பற்றுகிறோம் என்று அவரிடம் தெரிவித்துவிட்டு விசாரணையை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் அவரது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் தொடர்புகொள்ளவும் அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எனினும், தான் தடுத்து நிறுத்தப்பட்டவுடன் மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருக்கும் செயலாளருக்கும் செல்போன் மூலம் அவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ஷாருக் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரிடம் கேட்டபோது, ''என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். நடிகரும் சர்வதேச பிரமுகருமான நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவில் மிகவும் வரவேற்கப்படும் விருந்தினர் ஆவார். ஏராளமான அமெரிக்கர்கள் அவரது திரைப்படங்களை விரும்புகின்றனர்'' என்று கூறியுள்ளார்.
Saturday, 15 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment