Monday 24 August, 2009

ஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்படுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர்கள், பால்வளத்துறையின் ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பசும்பால் தற்போது லிட்டர் 13 ரூபாய் 54 காசு என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இனி இது 15 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்யப்படும். அதேபோல எருமை பால் 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி இது 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.பாலை கொள்முதல் செய்யும் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விற்பனை விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவின் மாதாந்திர பால் அட்டையின் விலை உயர்த்தப்படுகிறது.அட்டைக்கு 15 ரூபாய் 75 காசு என்ற விலைக்கு வழங்கப்பட்ட ஒரு லிட்டர் பால் இனி 17 ரூபாய் 75 காசுக்கு விற்கப்படும். இதன்மூலம் இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது.

No comments:

Post a Comment