Friday 7 August, 2009

செல்வராசா பத்மநாபன் கைது, கொழும்பு கொண்டுவரப்பட்டார்

ஆக.7: செல்வராசா பத்மநாபன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது அவர் விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பத்மநாதன் தற்போது இலங்கையில் உள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்புகள் குறித்து விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என தம்மை அறிவித்துக்கொண்ட 54 வயதான பத்மநாதன் இலங்கைக்கு நேற்று நள்ளிரவு பாங்காக் வழியாகக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். 'கேபி' எனப் பலராலும் அழைக்கப்பட்ட பத்மநாதன் சர்வதேச போலீசின் தேடுதல் பட்டியலில் இருந்தவர்.
விடுதலைப்புலிகளை ராணுவம் முற்றிலுமாக நெருங்கியபிறகு, அவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளராக பத்மநாதன் நியமிக்கப்பட்டார். பிரபாகரன் இறந்ததை புலிகள் தரப்பில் பத்மநாதன்தான் முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவித்துக்கொண்டார்.
முன்னதாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. எனினும் தாய்லாந்து அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பத்மநாதன் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு பாங்காக் வழியாக கொழும்பு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
தமிழர் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மீண்டும் உருவெடுக்கும் பயங்கரவாதத்தை எந்தவகையிலும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment