Monday 24 August, 2009

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 197 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, ஆஸ்திரேலியா 160 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எட்ட முடியாத 546 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (40), காடிச்(43) சிறப்பான துவக்கம் தந்தது. அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ரசிகர்களுக்கு உருவானது. ஆனால், பாண்டிங் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிளின்டாப்பினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதையடுத்து போட்டி தலைகீழாக மாறிபோனது. அடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள். வருவதும் உடனே பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். மனம் தளராமல் போராடிய ஹசி சதம் கடந்து அவுட்டானார். அவர் 14 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடு்ததார். ஆஸ்திரேலியா 348 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது.
197 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்க்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment